16 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து முன்னாள் பிரதி அமைச்சர் மேன்முறையீடு!

ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தமக்கு விதிக்கப்பட்ட 16 ஆண்டு கடுங்காவல் தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்கவும், விதிக்கப்பட்ட அபராதங்களை இரத்துச் செய்யவும் கோரி முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன நான்கு மேன்முறையீட்டு மனுக்களை இன்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி ரஞ்சன் டி சில்வா ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேன்முறையீட்டு மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்கப்படுவதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2006ஆம் ஆண்டில் சரண குணவர்தன அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியபோது, கட்டாய கொள்வனவு நடைமுறைகளை மீறி, குத்தகை அடிப்படையில் வாகனங்களைக் கொள்வனவு செய்து அரசுக்குப் பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தினார் எனக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இலஞ்ச, ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

நீண்ட விசாரணைக்குப் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் கண்டறிந்தது. அதன்படி, ஒவ்வொரு வழக்குக்கும் நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 1.8 மில்லியன் ரூபா அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுக்களில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் அபராதத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் என்று முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கோரியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.