நீதிவான் மன்றில் முன்னிலையானார் வவுனியா மாநகர மேயர் காண்டீபன்! – அவரின் பொருள்களை அவரே திருடினார் என்று விசித்திர வழக்கு என சுமந்திரன் மன்றில் தகவல்.

வவுனியா மாநகர சபை மேயரின் ஆடை, பதக்கம் மற்றும் சபையின் செங்கோல் ஆகியவை காணாமல்போனமை தொடர்பான விவகாரத்தில் மேயர் காண்டீபனின் பெயரும் பொலிஸாரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமது சட்டத்தரணியான சுமந்திரன் சகிதம் இன்று மேயர் காண்டீபன் வவுனியா நீதிவான் நீதிமன்றம் முன்னிலையாகி தமது பிரசன்னத்தைப் பதிவு செய்தார்.

நீதிமன்றம் அழைக்கும் சமயத்தில் அவர் மன்றில் பிரசன்னமாவார் என்ற உறுதிமொழியோடு இந்த விவகாரத்தில் அவரை விடுவித்தது நீதிமன்றம்.

மேயர் காண்டீபனைப் பதவி விலக்கும் வடக்கு ஆளுநரின் வர்த்தமானி உத்தரவுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று முற்பகல் இடைக்காலத் தடையுத்தரவு விடுத்த பின்னர், இன்று அவரை வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய அவரது சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றுக்கு ஒரு விடயத்தைச் சுட்டி காட்டினார்.

மேற்படி மூன்று பொருள்களையும் காணவில்லை என்று தெரிவித்து, அதைத் திருடிய குற்றச்சாட்டை மேயர் காண்டீபனின் மீது சுமத்தி, ஒரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை நீதிமன்றத்துக்குப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது ஒரு விசித்திரமான வழக்கு. முன்னுதாரணம் இல்லாத வழக்கு. வவுனியா மாநகர சபையின் மேயர் காண்டீபன்தான். மேல் நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு அதனை உறுதிப்படுத்தி இருக்கின்றது. இங்கு நீதிமன்றத்துக்குக் காணவில்லை என்று குறிப்பிட்ட செங்கோல், பதக்கம், மேயரின் ஆடை எல்லாமே மேயரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவரது பாவனைப் பொருள்கள். அவரது பொருள்களை அவரே திருடினார் என்று ஒரு விசித்திரமான வழக்கு. இந்த நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. எது, எப்படியாயினும் இந்த விவகாரத்தை ஒட்டி நீதிமன்றம் அழைக்கும் சமயங்களில் மேயர் காண்டீபன் மன்றில் பிரசன்னம் ஆவார்.” – என்று சுமந்திரன் மன்றில் தெரிவித்தார். அதை நீதிமன்றம் பதிவு செய்து மேயரை விடுவித்தது.

மேயர் காண்டீபனைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக வெளியான செய்திகள் தவறானவை, அப்படி நீதிமன்றம் எந்த உத்தரவையும் விடுக்கவில்லை என்று வழக்கு முடிந்த பின்னர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.