யாழில் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும் ஆஸ்திரேலிய அமைப்பு!

யாழ்ப்பாணத்தில் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றங்களை இலக்காகக் கொண்ட செயற்பாடுகளை முன்னெடுக்கத் தீர்மானித்திருப்பதாக ஆஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் அரச சார்பற்ற நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அந்த அமைப்பின் ஸ்தாபகர் டேஷ் பாலசுப்ரமணியம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

யாழ்ப்பாணம் முதல் ஊர்காவற்றுறை வரையிலான ஆயிரம் கிலோமீற்றர் நீளமான சைக்கிள் பயணத்தை, ஆஸ்திரேலியப் பிரஜைகள் உட்பட்ட ‘நூல்’ அமைப்பின் தோழர்களுடன் இணைந்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறான பயனுள்ள பயணங்கள் தமது சமூக சிந்தனைகளை மேம்படுத்த உதவுவதுடன், பயணத்தின் ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் வெளிநாடுகளில் வாழ்ந்த மக்களின் நிதி அன்பளிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த உதவிகளின் ஊடாகவே இங்கு அவசியமான செயற்றிட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இத்தகைய செயற்பாடுகள் அடுத்த ஆண்டும் ஜூலை மாதத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் டேஷ் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதன் ஊடாக வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பிராந்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு, கல்வி மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயற்படுத்தும் நீண்டகால இலக்கைக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.