நீர்கொழும்பு சிறை வன்முறை: 1200 கைதிகளிடம் வாக்குமூலம் – சி.ஐ.டி. விசாரணை தீவிரம்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இதுவரை 1200 கைதிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நடைபெற்ற நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது:-

“நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் மற்றும் பதிவாகிய உயிரிழப்புகள் மிகவும் கவலைக்குரியவை. இச்சம்பவம் தொடர்பாகச் சி.ஐ.டி.யினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை 1200 கைதிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் வசமிருந்த ஆயுதங்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அனுமானங்களின் அடிப்படையில் எவர் மீதும் எவ்விதக் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க முடியாது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் போதைப்பொருளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவமானது போதைப்பொருள் குற்றத்தின் நேரடி விளைவாகும். போதைப்பொருள் வலைப்பின்னலுடன் தொடர்புடைய தரப்பினருக்கும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தரப்பினருக்கும் இடையிலான முரண்பாடே இந்த மோதலாக உருவெடுத்துள்ளது. போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தடைபோடும் வகையிலேயே நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான முழுமையான உண்மை விரைவில் வெளிப்படுத்தப்படும்.

போதைப்பொருளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இதுவரை 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் பாவனையாளர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நீதி அமைச்சர் மிகச் சிறந்த முறையில் மேற்கொண்டுள்ளார். அந்தத் துறையுடன் தொடர்புடைய பிரிவுகளில் காணப்பட்ட வெற்றிடங்களையும் அவர் உரிய முறையில் நிரப்பியுள்ளார். எனவே, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு நீதி அமைச்சர் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டிய அவசியமில்லை.

தோற்றம் பெறும் சகல பிரச்சினைகளையும் எதிர்க்கட்சியினர் தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகவும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் அரச அனுசரணையுடன் சிறைச்சாலைகளுக்குள் மோதல்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்தச் சம்பவம் அவ்வாறானதல்ல. சிறைச்சாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதற்கான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.