இலங்கை எப்போதும் எனது இரண்டாவது தாய்நாடு போன்றது! பிரியாவிடை பெறும் சீனத் தூதுவர் சபாநாயகரிடம் நேரில் தெரிவிப்பு.

இலங்கை எனது இரண்டாவது தாய்நாடு போன்றது”: பிரியாவிடை பெறும் சீனத் தூதுவர் கீ சென்ஹொங் உணர்வுபூர்வ கருத்து!

இலங்கைக்கான சீனத் தூதுவராகப் பணியாற்றிவிட்டுப் பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் கீ சென்ஹொங், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவை நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றுமுன்தினம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சீனா இலங்கையின் நம்பிக்கைக்குரிய நட்புநாடு என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய தூதுவர் கீ சென்ஹொங், எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்திக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கத் சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், இலங்கை மக்கள் தனக்கு வழங்கிய அன்பு, அக்கறை மற்றும் விருந்தோம்பலைத் தான் எப்போதுமே மறக்க முடியாது எனவும், “இலங்கை எப்போதும் தனது இரண்டாவது தாய்நாடு போன்றது” எனவும் அவர் உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டார்.

இலங்கையில் தூதுவராக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைகளுக்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் வலுப்படுத்த அவர் வழங்கிய பங்களிப்புக்கும் சபாநாயகர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். கிராமப்புற சமூகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரதும் அன்பையும் மதிப்பையும் அவர் வென்றுள்ளதாகவும் சபாநாயகர் பாராட்டினார்.

அரசு முன்னெடுத்து வரும் நல்லிணக்க முயற்சிகள் குறித்தும், தேசிய ஒற்றுமையை மேம்படுத்துதல், இனவாதத்திற்கு இடமளிக்காமல் அனைத்துப் பிரஜைகளையும் சமத்துவம் மற்றும் கண்ணியத்துடன் நடத்துவதற்கான அரசின் உறுதிப்பாடு தொடர்பிலும் சபாநாயகர் தூதுவருக்கு விளக்கமளித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, இலங்கை – சீனா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்துக் கருத்துப் பரிமாறப்பட்டது. குறிப்பாக, இலங்கையின் போக்குவரத்துத் துறை மற்றும் வளர்ந்து வரும் மின்சார வாகன சந்தை தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், நாட்டின் நிலையான அபிவிருத்திக்குச் சீனாவின் தொடர்ச்சியான ஆதரவையும் சபாநாயகர் கோரினார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, சீனத் தூதுவரின் துணைவியார் ஜின் குயின், பிரதி சீனத் தூதுவர் சூ யான்வேய் மற்றும் தூதரக இரண்டாம் செயலாளர் சாங் லுடிங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.