கோர விபத்தில் 19 பேர் காயம்!
மாத்தறை – திஸ்ஸமஹாராம பிரதான வீதியில், வீரவிலைப் பிரதேச செயலகத்துக்கு அருகில் தனியார் பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று வீரவிலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவர்.
திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கிச் பயணித்த தனியார் பஸ், வீரவிலைப் பிரதேச செயலகத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளுடன் மோதியது. இதன்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 19 பேரும் உடனடியாகத் தேபரவெவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் பலத்த காயமடைந்த நால்வர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து வீரவிலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
