தெஹிவளையில் துப்பாக்கிச்சூட்டு முயற்சி முறியடிப்பு! – துப்பாக்கிதாரியுடன் போராடி அதனைப் பிடுங்கிய பேக்கரி உரிமையாளர்.
கொழும்பு, தெஹிவளை, கடவத்தை வீதியிலுள்ள தகநாயக்க விளையாட்டு மைதானத்துக்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.10 மணியளவில் முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த நபரே இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்த முற்பட்டுள்ளார்.
விளையாட்டு மைதானத்துக்கு அருகில் உள்ள பேக்கரி உரிமையாளரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட முயன்றுள்ளது. எனினும், அந்தச் சந்தர்ப்பத்தில் துப்பாக்கி இயங்கவில்லை.
இதன்போது சுதாரித்துக்கொண்ட பேக்கரி உரிமையாளர், துப்பாக்கிதாரியுடன் தைரியமாகப் போராடியுள்ளமையுடன், அவரிடமிருந்த துப்பாக்கியையும் பிடுங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சிறு போராட்டத்தில் பேக்கரி உரிமையாளர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தெஹிவளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
