சந்நிதி ஆலயப் பகுதியில் பரபரப்பு பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர் மீது பொலிஸில் புகார்!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர் மீது வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலய தீர்த்த உற்சவ தினமான நேற்று பல தாக சாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சுகாதாரத்தை உறுதி செய்யப்படாத நீரில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கட்டிகளைக் குளிர்பானங்களுக்குப் பயன்படுத்தத் தடை விதித்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், அங்குள்ள 20 பரல் ஐஸ் கட்டிகளைக் கைப்பற்றி உழவு இயந்திரத்தில் ஏற்றிச் செல்ல முற்பட்டுள்ளனர்.

அப்போது தாக சாந்தி நிலையத்தை நடாத்தியவரான புலம்பெயர் தமிழர் ஒருவர், பிறிதொரு வாகனம் மூலம் உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்தியதுடன் அவர்களின் கடமைக்கும் இடையூறு விளைவித்துள்ளார்.

தமக்கு அச்சுறுத்தல் விடுத்துக் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் பாதிக்கப்பட்ட பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.