சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: “நீதிக்கான நீள்பயணம்” எனும் தலைப்பில் யாழில் இன்று மாபெரும் சர்வதேச மாநாடு!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், “நீதிக்கான நீள்பயணம்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது.

மாநாட்டுக்கு முன்னதாக இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத் தூபி இடத்தில் வைத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரது உறவினரின் நினைவுபடுத்தலோடு கவனவீர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு, தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடையவுள்ளது.

இந்த மாநாட்டில் சர்வதேச இராஜதந்திரிகள் கலந்துகொள்ளவுள்ளதுடன், காணாமல்போனோர் விவகாரம் தொடர்பான புத்தகங்களும் வெளியிடப்படவுள்ளன.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டுக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தைக் கையாளுவதற்கோ அல்லது நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கோ எவ்வித நம்பிக்கைமிகு பொறிமுறைகளும் இல்லை என்பதால், சர்வதேச விசாரணையே தமக்குத் தேவை என்பதை மாநாட்டில் வலுவாக வலியுறுத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.