பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி மீட்பு.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச் சென்ற 26 வயதான யுவதி ஒருவரை அவரது காதலனே கடத்திச் சென்றுள்ளார் எனக் கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இவரைக் கடத்திச் சென்ற காரை நாரஹேன்பிட்டி பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி நிறுத்தியுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் யுவதி ஒருவர் காரில் கடத்திச் செல்லப்படுகின்றார் என்று பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் நாரஹேன்பிட்டியிலிருந்து நாவல நோக்கிப் பயணித்த காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்ட பொதிலும், சாரதி அதனை நிறுத்தாமல் தொடர்ந்தும் செலுத்திச் சென்றுள்ளார்.

நாரஹேன்பிட்டி – நாவல வீதியில் மீண்டும் காரை நிறுத்தச் செய்த சமிக்ஞையையும் மீறி வாகனம் சென்றதால், பொலிஸார் காரை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தி அதனை நிறுத்தினர். அப்போது காரைச் செலுத்திய நபர் வாகனத்தை அங்கேயே கைவிட்டுத் தப்பியோடியுள்ளார். அதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் காருக்குள் இருந்த 26 வயது யுவதி மீட்கப்பட்டார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக யுவதி தனது குடும்பத்தினருடன் மாநாட்டு மண்டபத்துக்கு வந்திருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது காதலனுக்குத் தெரியாமல் யுவதி விழாவுக்கு வந்திருந்தார் என்றும், அவர் கடத்தப்பட்டார் எனப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியது யுவதியின் தந்தை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருவரும் மாத்தறை, வெலிகமை மற்றும் மிதிகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மேற்படி இளைஞருக்குச் சொந்தமானது எனவும், அந்தக் காரை யுவதியின் தந்தையே பட்டமளிப்பு விழாவுக்கு ஓட்டிச் சென்றிருந்தார் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், தப்பிச் சென்ற சந்தேகநபர் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட யுவதி கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

தப்பிச் சென்ற சந்தேகநபரைக் கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை நாரஹேன்பிட்டி பொலிஸார் மற்றும் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையிலான குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.