எம் உறவுகளின் கண்ணீர் போராட்டம் ஒரு நாள் எமக்கான விடுதலைக் கதவுகளைத் திறக்கும்! – யாழில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் சிறீதரன் எம்.பி. எழுச்சி உரை.

“எமது உறவுகளின் கண்ணீர் போராட்டம் ஒரு நாள் நமக்கான விடுதலைக் கதவுகளைத் திறக்கும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. நீதிக்கான இந்த நீள் பயணம் என்பது சர்வதேசத்தின் கதவுகளைத் திறந்து, தமிழர்கள் மீதான காணாமல் போதல்களுக்கான நீதியை நிச்சயம் நிலைநாட்டும்” என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதியுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. இத்தனை ஆண்டு காலப் போராட்டப் பாதையில், “தங்கள் பிள்ளைகள் நிச்சயம் திரும்பி வருவார்கள்” என்ற பெரும் கனவோடும் நீதிக்கான ஏக்கத்தோடும் போராடிய 260 இற்கும் மேற்பட்ட தாய்மார்களும் தந்தையர்களும் தம் உயிரைப் பறிகொடுத்துள்ளனர்.

நல்லிணக்க ஆணைக்குழு போன்ற அமைப்புகள் மூலமாக உண்மை கண்டறிய முயன்றபோது, சாட்சியமளிக்கச் சென்ற மக்களை இலங்கை புலனாய்வுத்துறையினர் அச்சுறுத்தினர். வழியிலேயே கொட்டகைகளை அமைத்து மக்களைத் திசைதிருப்பி, சாட்சியம் அளிப்பதைத் தடுத்து நிறுத்தினர். இதனால் மக்கள் எவ்வித பாதுகாப்பும் இல்லாத அச்சச் சூழ்நிலையிலேயே வாழ நேரிட்டதுடன், முழுமையான சாட்சியங்களை வெளிப்படையாக வழங்க முடியாமலும் போனது. இதன் காரணமாக, உள்நாட்டு விசாரணை மற்றும் நீதி வழங்கும் முறைகள் முற்றிலும் முடங்கிப் போய்விட்டன.

உள்நாட்டில் நீதி மறுக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் தமிழ் மக்கள் அனைவரும் சர்வதேச நீதிமன்றம் மூலமாக மட்டுமே தங்களுக்குப் பூரண நீதி கிடைக்க முடியும் என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முதன்முதலில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்பட்டபோது, அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆதரவளித்து உதவியது. அன்றுமுதல் இன்றுவரை அப்பிரேரணைகள் வீணாகிவிடாமல், நீதியைப் பெறுவதற்கான முயற்சியில் அமெரிக்க நாடு காட்டிவரும் கரிசனையையும் பங்களிப்பையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் என்றும் நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.” – என்றார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள்பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு நேற்று நடைபெற்றது.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மாநாட்டை முன்னிட்டு, யாழ்ப்பாணம் நகரில் கவனவீர்ப்புப் பேரணியும் இடம்பெற்றது. பேரணியின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியில் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், துரைராசா ரவிகரன், கவீந்திரன் கோடீஸ்வரன், வேலன் சுவாமிகள், தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.