பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதில் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் பங்களிப்பு முக்கியமானது! – அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு.
பொருளாதார ரீதியில் பாதகமான நிலையைச் சந்தித்திருந்த இலங்கையை மீண்டும் சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதில் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் பங்களிப்பே மிக முதன்மையானது என்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் இலங்கைக்கு 8.2 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானமாகக் கிடைத்துள்ளது.
சுற்றுலாத் துறையைப் போன்றே, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணியே நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்ல பெரிதும் உதவுகின்றது.
எனவே, நாட்டுக்குப் பெருமளவு நிதியை அனுப்பி வைக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து பூர்த்தி செய்ய வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்.
அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறித்துப் பொதுமக்களிடையே பொதுவாக நிலவி வரும் எதிர்மறையான கருத்துக்களை மாற்றியமைக்க வேண்டும் எனவும், அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை மேம்படுத்தும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது.” – என்றார்.
