சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துடன் சந்திப்பு.
இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்கள் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை, நீடிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டுடன் செயற்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அதற்க அப்பாலான நாட்டின் பொருளாதார தொலைநோக்குப் பார்வை குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டின் வெளிப்புற சூழல், அந்நிய செலாவணி கையிருப்பு, கடனின் நிலைத்தன்மை, நிதி நிலைமை, பொருளாதார வளர்ச்சி மற்றும் 2027 மார்ச் மாதத்திற்குப் பின்னான இலங்கையின் பொருளாதார மீளெழும் திறன் குறித்து இரு தரப்பினரும் விரிவாக ஆராய்ந்தனர்.
நிலையான கடன் கொள்கைகள், அரச நிதி நிலைமை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான எதிர்பார்ப்புகள் உட்பட, தற்போதைய திட்டத்தின் இறுதியில் இலங்கை அடைய வேண்டிய அளவிடக்கூடிய பொருளாதார நிலைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அரச நிதியை ஒருங்கிணைத்தல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புகள் காரணமாக உழைக்கும் மக்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மீது விகிதாசாரமற்ற சுமை சுமத்தப்படக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.
பேரினப் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிதி ஒழுக்கத்தைப் பேணுகின்ற அதேவேளையில், குடும்பங்கள் மற்றும் நுண், சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாண்மைகள் எதிர்கொள்ளும் உண்மையான பொருளாதார நிலைமைகள் மீது அதிக கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தை ஒட்டுமொத்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள் மூலம் மாத்திரம் மதிப்பீடு செய்யாமல், குடும்பங்கள், தனிநபர்கள் மற்றும் வணிக மட்டத்தில் அதன் தாக்கம் மூலமாகவும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ஹர்ஷன ராஜகருணா, கபீர் ஹாஷிம், ஹெக்டர் அப்புஹாமி, அஜித் பி. பெரேரா, முஜிபுர் ரஹ்மான், பேராசிரியர் பிரசன்ன பெரேரா, தலல் ரபி, குசும் விஜேத்திலக்க, திலும் அழகியவண்ண மற்றும் சுரங்க ரணசிங்க உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
