நீதித்துறை என்பது அரசு மாறும்போதெல்லாம் மாற்றப்படும் நிறுவனமாக இருக்கவே கூடாது! – அதன் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜீவன் எம்.பி. வலியுறுத்து.
அரசமைப்பின் 22 திருத்தத்தின் ஊடாக நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், எனினும் அந்த மாற்றம் எத்தகைய நடைமுறையின் ஊடாகக் கொண்டுவரப்படுகின்றது என்பதில்தான் தமது முக்கிய கேள்வி உள்ளது என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் பெருமளவிலான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பது மட்டுமே முழுமையான தீர்வாகிவிடாது.
நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அவற்றுக்குத் தேவையான பௌதீக வளங்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் இணையாக முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டாலே தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக நிறைவு செய்ய முடியும்.
நீதித்துறை என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு முழுமையான நம்பிக்கை வைக்கப்படும் மிக முக்கியமான அரச நிறுவனமாகும். தற்போது நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லை இரண்டு வருடங்களால் அதிகரிக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் வேறு அரசுகள் ஆட்சிக்கு வரும்போது மீண்டும் அதனை மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம்.
ஒவ்வொரு அரசும் தங்களது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப நீதித்துறையில் மாற்றங்களை மேற்கொள்ளும் நிலை உருவானால், அது நீதித்துறையின் நிலைத்தன்மையையும் மக்கள் மத்தியிலான நம்பிக்கையையும் கடுமையாகப் பாதிக்கும்.
நீதித்துறை என்பது அரசுகள் மாறும்போதெல்லாம் மாற்றப்படும் ஒரு நிறுவனமாக இருக்கக்கூடாது. மாறாக அதன் சுயாதீனமும் நிலைத்தன்மையும் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும்.” – என்றார்.
இதன்போது மலையக மக்களின் உரிமைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த 200 ஆண்டுகளாகப் பல்வேறு சவால்களுக்கும் தொடர் போராட்டங்களுக்கும் மத்தியில் மலையக மக்கள் படிப்படியாக முன்னேறி வந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
காணி உரிமை, வீட்டுரிமை, சம்பள உயர்வு உள்ளிட்ட ஒவ்வொரு முன்னேற்றத்துக்குப் பின்னேயும் நீண்டகாலப் போராட்டங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு உரிமையை வென்றெடுப்பது எவ்வளவு கடினமோ, அதனைத் தொடர்ந்து பாதுகாத்து நிலைநிறுத்துவது அதைவிடக் கடினமானது என்றார்.
எனவே, மக்களின் உரிமைகளையும் நீதியையும் பாதுகாக்கும் மிக முக்கியமான தூணாக விளங்கும் நீதித்துறையின் பாதுகாப்பு மிக அவசியமானது.” – என்றார்.
