சதிமுயற்சிகளைத் தோற்கடித்து அரசைப் பாதுகாத்தே தீருவோம்! – முன்னாள் அமைச்சர் வாசுதேவ திட்டவட்டம்.
தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதிமுயற்சிகளைத் தோற்கடித்து, இந்த அரசைப் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய அரசு நாட்டின் உயர் வர்க்கத்தினருக்குப் பல வகைகளிலும் பிரச்சினையாக மாறியுள்ளது. குறிப்பாக, போதைப்பொருள் வர்த்தகம் கணிசமான அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், நாட்டை விட்டுத் தலைமறைவாகியிருந்த பல குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, கோடிக்கணக்கான டொலர்களை வெளிநாடுகளுக்குக் கடத்தியவர்கள் மற்றும் சட்டவிரோதமாகப் பணத்தை வெளியேற்ற முயன்ற நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாம் நாடாளுமன்றத்தில் இருந்த காலத்தில் ‘பண்டோரா ஆவணங்கள்’ தொடர்பில் பல உண்மைகளை வெளிப்படுத்தினோம்.
நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட பெருமளவிலான பணத்தை மீளப் பெற வேண்டும். எனினும், அன்றைய அரசுகள் அதற்கான எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
ஆனால், இன்று தற்போதைய அரசு இது தொடர்பில் துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்பதால், அது உயர் வர்க்கத்தினருக்கும் பிற்போக்குவாத சக்திகளுக்கும் வேதனையாக மாறியுள்ளது. இதனால் அவர்கள் ஒன்றிணைந்து அரசைக் கவிழ்க்கவும், மக்களைக் கிளர்ச்சியடையச் செய்யவும் முயற்சிக்கின்றனர்.
தற்போதைய அரசின் கீழ் மக்களுக்கான பொருளாதாரச் சிரமங்கள் (அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்றம், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை) இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
எனினும், இவற்றுக்கான தீர்வு ‘திசைகாட்டி’ அரசைக் கவிழ்ப்பது அல்ல. மாறாக, அரசு முன்வைத்துள்ள அபிவிருத்தி மற்றும் முதலீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமே தீர்வுகாண முடியும்.
சகல பிரச்சினைகளையும் இரண்டு வருடங்களுக்குள் முழுமையாக நிறைவேற்றிவிட முடியாது. மிகப்பெரிய பொருளாதாரச் சுமையுடனேயே இந்த அரசு செயற்படுகின்றது. எனவே, அரசுக்கு மேலும் உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.
