ரூ.812 கோடியில் ‘அண்ணன் சீர் திட்டம்’: தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை அறிவித்தது தமிழக அரசு!
தமிழக அரசின் அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்திற்கு ஆதார் அட்டை கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு
சமூக நல இயக்குநரகம் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் முதற்கட்டத்திற்காக ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அக்டோபர் 5ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு நடைபெறும் திருமணங்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
பயன்பெறத் தகுதியுள்ள பெண்கள் ஆதார் எண்ணுக்கான சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.
ஆதார் அட்டை இல்லாதவர்கள், திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன் ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அருகிலுள்ள ஆதார் பதிவு மையங்களை http://www.uidai.gov.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
