செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச விசாரணை கோரும் போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதியானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது முழுமையான ஆதரவையும் தோழமையையும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கடந்த பல ஆண்டுகளாகத் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதற்காகவும், நீதியை நிலைநாட்டுவதற்காகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட இலங்கையில் கண்டறியப்பட்ட ஏனைய மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள், உள்நாட்டுப் பொறிமுறைகளினூடாக வெளிப்படைத்தன்மையின்றி இழுத்தடிக்கப்படுவது பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யப்படும் பாரிய அநீதியாகும்.

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகள் மீதான நம்பிக்கை முற்றாக இழக்கப்பட்டுள்ள நிலையில், உண்மையைக் கண்டறிவதற்கும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும் கண்காணிப்புடன் கூடிய சுயாதீன விசாரணையே ஒரே தீர்வாக அமையும் என்ற பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றது.

நீதிக்கான இவர்களது குரல் வெறுமனே பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குரல் மட்டுமல்ல. அது மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் அனைவரினதும் தார்மீகக் கடமையாகும்.

எனவே, சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புகளும் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதியான விசாரணையை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நீதி நிலைநாட்டப்படும் வரை முன்னெடுக்கப்படும் உறவினர்களின் நியாயமான போராட்டத்துக்கு, அறிவுசார் சமூகத்தின் பிரதிநிதிகள் என்ற வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்றும் துணைநிற்கும்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.