நாட்டில் புலம்பெயர் அலுவலகம் திறக்கப்படும்… ஜனாதிபதி!
புலம்பெயர் மக்களின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கையில் புலம்பெயர் அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு, சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்ற “கல்விசார் வல்லுநர் சங்கங்களின் மாநாடு – 2022” விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டை கட்டியெழுப்புவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கறுப்புப் பட்டியலில் இருந்து 06 தமிழ் அமைப்புகளையும் 316 நபர்களையும் நீக்குவதற்கு அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
பல நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட நீண்ட கால ஆய்வுக்குப் பிறகு அந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீதான தடை நீக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
முறையான பணி ஆணை வழங்கினால், புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நாட்டுக்கு தேவையான டொலர்களை கொண்டு வரும் பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நேற்று தெரிவித்தார்.