உயிர் நீத்தவர்களின் உடலங்களைக் கிளறி எறிந்த ஒழுக்கமற்ற இலங்கை இராணுவம்!

“உலகிலேயே ஒழுக்கமற்ற இராணுவமாக நாம் இலங்கை இராணுவத்தையே பார்க்கின்றோம். உலகில் எங்கும் எந்த இராணுவமும் உயிர் நீத்தவர்களின் உடலங்களைக் கிளறி எறியவில்லை. ஆனால், இலங்கை இராணுவம் அதனை முன்னெடுத்தது.”

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் மாவீரர் பணிக்குழுவினர், பொதுமக்கள் ஆகியோரின் பங்களிப்புடன் சிரமதான அடிப்படையில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், அம்பாறை மாவட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் செய்து துப்புரவாக்கப்பட்டது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், தவிசாளர்கள் உள்ளிட்ட குழுவினர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். மாவீரர் பணிக்குழுவினரும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது திருக்கோவில் பொலிஸார் ஸ்தலத்துக்கு வந்து சிரமதானப் பணியை இடைநிறுத்துமாறு கோரினர். இந்தக் காணி சிரமதானம் காரணமாக ஏதாவது இனப் பிரச்சினை எழும் எனவும், அதனால் இப்பணியை நிறுத்துமாறும் பொலிஸார் கோரினர். எனினும், “இது எமது மண்ணுக்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூருகின்ற நிகழ்வு. இது எமது உரிமை. இதில் எந்தப் பிரச்சினையும் வரப்போவதில்லை” என்று மக்கள் பிரதிநிதிகள் கூறியதையடுத்து பொலிஸார் அங்கிருந்து சென்றர். அதனைத் தொடர்ந்து சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்,

“இம்மாதம் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் புனிதமான மாதம். 2009ஆம் ஆண்டு வரையில் இந்த நினைவேந்தல்கள் பாரியளவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. 2009 மே 18இல் எமது உரிமைப் போராட்டம் இன அழிப்பின் ஊடாக முடிவுறுத்தப்பட்ட நிலையில் வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்தும் வித்துடல்கள் இராணுவத்தினரால் கிளறி எறியப்பட்டன.

அதன் பின்னர் பல துயிலும் இல்லங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். பல துயிலும் இல்லங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க முடியாத வகையில் இலங்கை இராணுவத்தினரும் புலனாய்வுத்துறையினரும் நெருக்கடிகளை வழங்கி வருகின்றனர். அதனையும் தாண்டி எமது உறவுகளை நினைவுகூருவதை எமது மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர்களை நினைவுகூரும் வகையில் துயிலும் இல்லங்கள் பல்வேறு தரப்பினராலும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றது. 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரையில் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படும். சகல தடைகளையும் தாண்டி நினைவேந்தல் உரிமையை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இன்று பல மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவம் குடிகொண்டுள்ளது. வடக்கு, கிழக்கில் உள்ள பல மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவத்தினர் குடிகொண்டுள்ளனர். அந்த இடங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும். இது இராணுவ ஒழுக்கமற்ற நடவடிக்கையையே காட்டுகின்றது.

இறந்தவர்களின் உடலங்களைக் கிளறி எறிந்த செயலை உலகில் எந்த இராணுவமும் செய்ததாக நாங்கள் அறியவில்லை. உலகிலேயே ஒழுக்கமற்ற, நெறிகெட்ட இராணுவம் என்பதை இலங்கை இராணுவத்தினர் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும்.

தமிழினம் இந்தத் தீவிலே வாழும் வரைக்கும் நினைவேந்தல்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். வெறுமனே விளக்கேற்றுவதும் மாலை போடுவதும் கடமையல்ல. மாவீர்களின் இலட்சியத்தை அடைவதற்கு ஒவ்வொருவரும் நேர்மையாகச் செயற்பட வேண்டும்.

ஒருபுறம் அரசின் தோளில் கைகளைப் போட்டுக்கொண்டு அவர்கள் போடும் எலும்புத்துண்டுகளுக்காக தமிழ்த் தேசியத்தை நாங்கள் விற்கக் கூடாது. நாம் அனைவரும் அந்த இலட்சியத்தை அடைவதற்காக ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.