உலக கோப்பை கால்பந்து; வெற்றி கோப்பையின் வரலாறு…!

உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ஆரம்பத்தில் ‘ஜூலெஸ் ரிமேட்’ பெயரிலான வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவராக இருந்த ‘ஜூலெஸ் ரிமேட்’ உலக கோப்பை கால்பந்து போட்டியின் தந்தை ஆவார். அதனால் அவரை கவுரவப்படுத்தும் நோக்கில் இந்த பெயரில் உலக கோப்பை அழைக்கப்பட்டது. 1970-ம் ஆண்டு பிரேசில் அணி 3-வது முறையாக உலக கோப்பையை சொந்தமாக்கிய போது ஜூலெஸ் ரிமெட் கோப்பையை அந்த அணி நிரந்தரமாக வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் பிறகு புதிய உலக கோப்பையை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையொட்டி 7 நாடுகளை சேர்ந்த கலைஞர்களிடம் இருந்து 53 டிசைன்கள் சமர்பிக்கப்பட்டன. இவற்றில் இத்தாலியை சேர்ந்த சிற்பி சில்வியோ காஸானிகாவின் டிசைன் தேர்வானது. அவர் நேர்த்தியான தொழில்நுட்பத்துடன் பளபளக்கும் தோற்றத்தில் அழகுற வடிவமைத்த கோப்பை தான் 1974-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.

ஏறக்குறைய 5 கிலோ தங்கத்தால் (18 காரட் தங்கம்) உருவாக்கப்பட்ட கோப்பையில், இரண்டு அடுக்குகள் கொண்ட அடிப்பகுதி மாலசைட் தாதுப்பொருளால் ஆனது. 36.8 சென்டிமீட்டர் உயரமும், 6.142 கிலோ எடையும் கொண்ட இந்த உலக கோப்பையில், இரு மனித உருவங்கள் பூமியை தாங்கிப்பிடிப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகும். வெற்றி பெறும் அணிக்கு தங்கமுலாம் பூசப்பட்ட மாதிரி கோப்பையே வழங்கப்படும்.

அசல் கோப்பை ‘பிபா’ வசம் இருக்கும். இந்த உலக கோப்பையையொட்டி அசல் கோப்பை உலகம் முழுவதும் 51 நாடுகளுக்கு பயணித்து சில தினங்களுக்கு முன்பு கத்தார் திரும்பியிருக்கிறது. விளையாட்டு உலகில் அதிக விலை கொண்ட கோப்பைகளில் இதுவும் ஒன்று. இன்றைய மதிப்பு ஏறக்குறைய ரூ.162 கோடியாகும்.

Leave A Reply

Your email address will not be published.