பெரு நாட்டில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவின் தலைநகர் லிமாவில் ஜார்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை தனியார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட தயராக இருந்தது. விமானத்தில் 102 பயணிகளும், விமானி ஊழியர்கள் 6 பேரும் இருந்தனர். மேலே பறப்பதற்காக ஓடுபாதையில் விமானம் வேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக விமானத்தின் பாதையில் தீயணைப்பு வாகனம் ஒன்று குறுக்கே வந்தது. ஓடுபாதையில் வேகமாக வந்த விமானம் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதியது. இதில் விமானத்தில் தீப்பற்றிய நிலையில் நிற்காமல் தொடர்ந்து ஓடுபாதையில் ஓடிக்கொண்டே இருந்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் மரண ஓலமிட்டனர். விமானத்தில் அடிப்பகுதியில் தீப்பிடித்து கரும்புகை வெளியேறியவாறு பல அடி தூரத்துக்கு சென்று விமானம் நின்றது. இதையடுத்து விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டு விமானத்தில் பற்றிய தீயை போராடி அணைத்தனர்.

அதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் விமானம் மோதிய தீயணைப்பு வாகனத்தில் பயணித்த 2 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பயணிகள் காயம் மேலும் ஒரு தீயணைப்பு வீரர் பலத்த காயம் அடைந்தார். அதே போல் இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகளில் 20 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. தீயணைப்பு வீரர் உள்பட காயமடைந்த 21 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சதியா என விசாரணை? விமானம் புறப்படும்போது ஓடுபாதையில் தீயணைப்பு வாகனம் ஏன் நுழைந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது விபத்து குறித்து விரிவாக விசாரிக்கப்படும் என விபத்துக்குள்ளான தனியார் விமான நிறுவனமும், விமான நிலைய நிர்வாகமும் அறிவித்துள்ளன. மேலும் இந்த சம்பவம் கொலைக்கான சதியாக இருக்கலாம் என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாக லிமா அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.