ராஜா ராபர்ட்டுக்குத் துரோகம் செய்தாரா ராணி ரச்சிதா? அசிம் – ஏடிகே ரணகள சண்டை!

பிக் பாஸ் 6 நாள் 40

“இனிமே நான் விளையாட மாட்டேன்… உன்னுடன் கதைப்பதே அசிங்கம்” என்று ஏடிகே வெடிக்க “ஏன் ராப் மாதிரி பாடறே?’ என்று அசிம் கிண்டலடிக்க ஏடிகேவின் கோபம் உச்சிக்குச் சென்றது. “உன்னைத்தான் மக்கள் வெளியே காறித் துப்புவார்கள்” என்று ஏடிகே எரிமலையாக சூழல் இன்னமும் ரணகளமானது.

பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பார்கள். கதிரவன் என்கிற திருடன் அகப்பட்ட நாள் இன்று. ஆம், அவரிடமிருந்து கோபம் வெளிப்பட்ட விதிவிலக்கான தருணத்தை இன்று பார்க்க முடிந்தது. ஆனால் அந்தக் கோபத்தைக் கூட அவர் மென்மையாகவே வெளிப்படுத்தியது இனிமை.

ஹைடெசிபலில் மூச்சைப் பிடித்துக் கொண்டு முழு எனர்ஜியோடு சண்டை போடும் அசிமிற்கும் கதிரவனுக்கும்தான் எத்தனை வித்தியாசம்?!

‘ராணியே தனக்குத் துரோகம் செய்து விட்டார்’ என்பதை அறிந்து ராஜா உருகி உருகி கண்ணீர் விட்டு அரற்றியதுதான் இந்த எபிசோடின் உச்சக்கட்ட காமெடி. இத்தனை அப்பாவியான ராஜாவை வரலாறு இதுவரை கண்டிருக்காது. ‘இம்சை அரசன்’ படத்தில் கூட இப்படியொரு காமெடிக் காட்சி வரவில்லை.

நாள் 40-ல் நடந்தது என்ன?

சேவகர்களான மைனாவையும் அமுதவாணனையும் கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ், ‘பொருள்களை களவாடி நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்’ என்று ஸ்பெஷல் அனுமதி கொடுத்தார். அதே சமயத்தில் கதிரவனை அழைத்து “சேவகர்கள் களவு செய்யப் போகிறார்கள். ராஜ விசுவாசியான நீங்கள் அவற்றை வசப்படுத்தி பாதுகாக்க வேண்டும்’ என்று அந்தப் பக்கமும் போட்டுக் கொடுத்தார். (பாஸ்… அப்ப நாம…)

அபிநயத்துக் கொண்டே கதிரவனிடம் ரகசிய ஆலோசனை செய்ய முயன்றார் மைனா. கண்ணாடிக்குப் பின்பு ரச்சிதா இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க “ராணிக்குக் கேட்கும்… ஜாக்கிரதை” என்றார் கதிரவன். “ராணி ஒரு லூஸூ. ஒன்றும் புரியாது” என்று நடனம் ஆடிக் கொண்டே மைனா சொல்ல “நீங்கள் அழகாக இருக்கிறீர்களாம்” என்று அதை ராணிக்கு மொழி பெயர்த்துச் சொன்னார் கதிரவன். (அட! கதிவரனுக்கு காமெடி கூட வருகிறது!).

சிரிப்புத் திருடன் கதிரவனுக்கு வந்த அதிசய கோபம்

பார்க்க சைலன்ட்டாக இருந்தாலும் செயலில் வயலன்ட்டாக இருக்கிறார் கதிரவன். ராஜகுருவின் நகைகளை அவர் தண்ணீர் பாட்டிலில் ஒளித்து வைத்து உலாத்திக் கொண்டிருந்ததை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அதை அவர் குகைக்குள் தூக்கிப் போட ஆபரேஷன் சக்ஸஸ். “எப்படில்லாம் யோசிக்கறாங்கப்பா” என்று கதிரவனின் டெக்னிக்கை வியந்தார் அசிம். (கூட்டுக்களவாணிக!).

கதிரவனை வீட்டின் உள்ளே அடைத்த பாதுகாவலர்கள், கதவுகளைப் பலத்த வேலி போட்டு அடைத்து வைத்திருக்க “சுச்சா போகணும். கதவைத் திறங்க’ என்கிற சிறுவன் மாதிரி அடம்பிடித்தார் அசிம். ஆயிஷா அதை மறுக்க ‘அப்புறம் நல்லாயிருக்காது… திறங்க” என்று மிரட்டுவது மாதிரி பேசினார். பிறகு வலுக்கட்டாயமாகத் தடைகளை தள்ளி விட்டுச் சென்றார். தளபதியே இந்த லட்சணத்தில் இருந்தால் காவல் எப்படி நடக்கும்? அசிமின் நோக்கம் வெளியே சிகரெட் பிடிக்கச் செல்வதா அல்லது கதிரவன் தப்பிக்க வழி ஏற்படுத்தித் தருவதா என்று தெரியவில்லை.

கதிரவனின் காலில் விலங்கு மாட்டப்பட்டிருப்பதால் “தோல் வழட்டுது… கழட்டுங்க. நான் பாத்ரூம் போகணும்” என்று அவர் சொல்ல பாதுகாவலர்கள் தயங்கினார்கள். ஏனெனில் கதிரவன் முன்பு செய்த காரியம் அப்படி. சாப்பாடு ஊட்ட வரும் அம்மாவிடமிருந்து அடிக்கடி தப்பித்து ஓடிவிடும் சிறுவன் மாதிரி அவ்வப்போது ஓடிக் கொண்டிருந்தார். “எனக்கு கால்ல காயம் ஏற்படுதுங்க… இது கூடவா உங்களுக்குப் புரியலை” என்று கதிரவன் சற்று ஆத்திரப்பட்டவுடன்தான் நிலைமையின் தீவிரம் பாதுகாவலர்களுக்குப் புரிந்து விலங்கைக் கழட்டினார்கள்.

‘அசிம் என்றால் பாதுகாவலர் என்று பொருளாம்’

‘ஜோதா அக்பர்’ படத்தின் பாடலோடு நாள் 40 விடிந்தது. தமிழ் மன்னர்களுக்கு முகலாய மன்னரை வாழ்த்திப் பாடும் பாடல். நல்ல காம்பினேஷன்! இந்தப் பாடல் ‘அசிம்’ என்றுதான் துவங்கும். இதில் ஆச்சரியம் என்னவென்றால், ‘அசிம்’ என்றால் பாதுகாவலர் என்கிற அர்த்தமும் உள்ளது. பிக் பாஸ் டீம் திட்டமிட்டுத்தான் அசிமை படைத்தளபதியாக்கியிருக்கிறார்கள் போல. ஆனால் அவர் தனது பெயருக்கு ஏற்ப நடக்கிறாரா?!

எதையோ திருடிக் கொண்டு ஓடிய கதிரவனை ஏடிகே வளைத்து பிடித்து விட்டார். “யோவ் ராம்… வந்து ஹெல்ப் பண்ணுய்யா” என்று பரிதாபமாக அவர் அழைக்க மிக சாவகாசமாக நடந்து வந்த ராம். ‘என்ன விஷயம்?’ என்பது மாதிரியே நின்றார். (நல்லா வருவீங்க தம்பி!) நகைகள் களவு போகாதவாறு பதுக்கி வைத்தார் தனலஷ்மி.

கட்டிப் போடப்பட்டிருந்த கதிரவனை நைசாக அவிழ்த்து விட்டார் அசிம். ‘இவனை யார் அவிழ்த்தது?’ என்று ராம் அப்பாவியாக கேட்டுக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் நவரத்தினங்களை ஆட்டையைப் போட்டுக் கொண்டிருந்தார் ஷிவின். ‘யாருமே இந்தப் பக்கம் வரவில்லையே?’ என்றார் ராம். (இவ்வளவு அப்பாவியாவா இருப்பாங்க?!). திருடிய நகைகளை சின்க்கின் அருகேயிருந்த ஈரத்துணியில் ஒளித்து வைத்து சாமர்த்தியம் காட்டினார் அமுதவாணன்.

அசிம் – ஏடிகே – இன்னொரு உக்கிரமான சண்டை

கதிரவனின் விலங்கை கழற்றலாம் என்று பார்த்தால் சாவியைக் காணோம். “ஒரு சாவியைக் கூட பாதுகாக்க முடியவில்லை… அத்தனை கவனக்குறைவு. நீரெல்லாம் என்ன பாதுகாவலரோ?!” என்பது மாதிரி ஏடிகேவின் ஈகோவை அசிம் உசுப்பேற்றி விட இருவருக்குள்ளும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அசிம் தன்னை ட்ரிக்கர் செய்கிறார் என்கிற எளிய லாஜிக் கூட ஏடிகேவிற்குப் புரியவில்லை. உணர்ச்சி மிகுதியில் நரம்பு புடைக்க கத்தி தான் அணிந்திருந்த கோட்டை ஆத்திரத்துடன் தரையில் வீசினார். “இனிமே நான் விளையாட மாட்டேன்… உன்னுடன் கதைப்பதே அசிங்கம்” என்று ஏடிகே வெடிக்க “ஏன் ராப் மாதிரி பாடறே?’ என்று அசிம் கிண்டலடிக்க ஏடிகேவின் கோபம் உச்சிக்குச் சென்றது. “உன்னைத்தான் மக்கள் வெளியே காறித் துப்புவார்கள்” என்று ஏடிகே எரிமலையாக சூழல் இன்னமும் ரணகளமானது. மற்றவர்களை உசுப்பி விட்டு முழு எனர்ஜியுடன் சண்டை போடுவதில் அசிம் திறமையானவராக இருக்கிறார்.

“என்னை வெளியே அனுப்பிச்சாலும் பரவாயில்ல. இனி இங்க விளையாட மாட்டேன்” என்றெல்லாம் கோபத்தில் உறுமி உலவிக் கொண்டிருந்த ஏடிகேவிடம் “அதுக்கா இத்தனை நாள் கஷ்டப்பட்டீங்க… நீங்க நோ்மையாத்தானே விளையாடினீங்க… அப்புறம் என்ன?” என்று ஷிவின் தந்த ஆலோசனை சரியானது. தான் கண்விழித்து உண்மையாக விளையாடியும் அவப்பழி சொல்கிறார்களே என்பதுதான் ஏடிகேவின் கோபத்திற்குக் காரணம்.

“ஒரு மனுஷன் கால் வலில இருக்கான். அப்பக் கூட மனிதாபிமானமே இல்லாம பேசிட்டு இருக்க” என்று ஏடிகே மறுபடியும் கோதாவில் குதிக்க, “நீதானே விலங்கு போட்டே. மனிதாபிமானம் பத்தில்லாம் நீ பேசக் கூடாது” என்று அசிமும் விடாமல் மல்லுக்கட்ட, இன்னொரு முறை ஹைடெஸிபல் சண்டை உக்கிரமாக நடந்தது. “உன்னை மாதிரி கேவலமான ஒரு ஆளை நான் பார்த்ததேயில்லை” என்று ஏடிகே கத்த “அப்புறம்… வேற என்ன?” என்று நக்கலாகல் கேட்டு அவரைச் சிறப்பாக வெறுப்பேற்றினார் அசிம். “ராஜாவும் ராணியும் சிறப்பாகச் செயல்படாத நாடு எங்கே உருப்படப் போகிறது?” என்று இளவரசி ஜனனியே ராஜரகசியத்தை வெளியில் சொன்னது சிறப்பு.விலங்கின் சாவியை அசிம்தான் வைத்திருந்தார் போலிருக்கிறது. அவர் கிச்சன் ஏரியாவில் அதை நைசாக போட்டு விட, கோபத்துடன் அதைக் கண்டுபிடித்த ஏடிகே ஆவேசத்துடன் வந்து கதிரவனின் விலங்கை கழற்றிய வேகத்தில் ‘அய்யோ… இவருக்கு மனிதாபிமானம் மிகுதியாகி நம் கால் எலும்பை உடைத்து விடுவாரோ’ என்று கதிரவன் பயந்தது நல்ல காமெடி.

‘ராஜா சரியில்லை. ஆட்சியைக் கலையுங்கள்’

மீண்டும் தப்பித்து ஓடிய கதிரவன் (எத்தனை தடவ?!) வாளை எடுத்துக் கொண்டு ஓட, சேவகர்கள் பாய்ந்து பிடித்தாலும் அதை குகையை நோக்கி வீசினார் கதிரவன். அவரின் சாமர்த்தியத்தைக் கண்டு ‘சபாஷ்’ என்று தளபதியார் தன்னிச்சையாக கைத்தட்டி விட “அவனுக்கு ஏன் நீ சப்போர்ட் பண்றே?” என்று இப்போதுதான் ராஜாவிற்கு லைட்டாக சந்தேகம் வந்தது. ‘அசிம் உற்சாகமாகக் கைத்தட்டியதை நாங்கள் பார்த்தோம்’ என்று மைனாவும் ஆயிஷாவும் சாட்சி சொன்னார்கள். ‘அடச்சை… வாள் போச்சே என்ற ஆதங்கத்தில்தான் கையை அப்படி உதறினேன்’ என்று பிளேட்டை தலைகீழாக மாற்றிய அசிமின் சாமர்த்தியம் இருக்கிறதே?! அடேங்கப்பா! உலக நடிப்புடா சாமி!

ராஜகுருவை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ் “நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? திருட்டுக்கள் அதிகமாகி விட்டன. சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. அரசியலமைப்பு சட்டம் 356-ன்படி இந்த ஆட்சியைக் கலைத்தாக வேண்டும். ராஜா பதவி விலக வேண்டும். காட்டுக்குள் சென்று தவம் செய்யட்டும். அப்போதுதான் அவருக்குப் புத்தி வரும்” என்று எகிறித் தள்ளிய பிக் பாஸ், “அரசக் குடும்பத்திலிருந்து தகுதியுள்ள ஒருவரை பதவியில் அமர்த்துங்கள்” என்று யோசனை சொன்னார்.

இங்குதான் ராஜகுருவின் அரசியல் சாணக்கியத்தனம் வெளிப்பட்டது. “அந்த மூன்று பேருக்கும் கூட தகுதியில்லை. அவர்களுக்கு முதிர்ச்சியே இல்லை. தகுதியுள்ள ஒருவரைத் தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்துகிறேன்” என்ற விக்ரமன், இலவச இணைப்பாக “தளபதியையும் மாற்றி விடட்டுமா” என்று அனுமதி கேட்டது புத்திசாலித்தனம். “உங்கள் முடிவு இறுதியானது… எதையாவது செஞ்சு டாஸ்க்கை முடிங்கய்யா” என்று நொந்து போய் சொன்னார் பிக் பாஸ்.

ராணியின் துரோகத்தை எண்ணி நொந்து போன ராஜா

சபையைக் கூட்டிய ராஜகுரு, ராஜாவை பதவி விலகச் சொல்லி கேட்க, பாவம்… அந்த அப்பாவி ராஜாவும் ‘சம்மதம்’ என்று அறிவித்தார். ராணியின் டார்ச்சர் தாங்க முடியவில்லை போலிருக்கிறது. ராஜா காட்டுக்குச் செல்வதை எண்ணி வருந்துவது போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்த மக்கள், உள்ளுக்குள் சிரிப்பாக சிரித்துத் தீர்த்தார்கள். ‘அப்போ… அடுத்த மன்னர் நான்தானே?’ என்று அப்போதே கர்ச்சீப் போட்டு அமர ஆயுத்தமானார் இளவரசர். தந்தை பதவி விலகுவதை எண்ணி அவர் பாவனையாக கண்ணீர் விட “டேய்… டேய்… நடிக்காதடா… நீ சிரிக்கறது முதுகுல தெரியுது” என்று மணிகண்டனைக் கிண்டலடித்தார் அமுதவாணன்.

‘உனது ராஜாங்கம் இதுதானே… ஒதுங்கக் கூடாது மன்னவனே’ என்கிற பாடல் வரிகளை யாரோ கிண்டலாகப் பாட தள்ளாடி விழுவது போல் பாவனை செய்து பிறகு குகைக்குள் சென்று செட்டில் ஆனார் ராஜா… அதாவது முன்னாள் ராஜா.

‘மக்களில் தகுதி வாய்ந்த ஒருவரை பதவியில் அமர்த்துவேன்’ என்று கன்ஃபெஷன் ரூமில் சொன்ன ராஜகுரு, எதனாலோ ராணியை பதவியில் அமர்த்தினார். குழப்பமோ கலகமோ வந்து விடக்கூடாது என்கிற யோசனை போல.

‘அருங்காட்சியகம்’ டாஸ்க் முடிவை எட்டுவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. மக்களை ஒன்று திரட்டிய பிக் பாஸ், சிலருக்குத் தனிப்பட்ட வகையில் அளிக்கப்பட்ட ‘சீக்ரெட் டாஸ்க்’ தொடர்பான காட்சிகளை தொலைக்காட்சியில் காட்ட வழக்கம் போல் சிரிப்பொலிகள் எழுந்தன. ஆனால் இரண்டு போ் முகத்தில் மட்டும் சந்தோஷம் இல்லை. ஒன்று தனலஷ்மி. அப்செட் ஆன முகத்துடன் சோகமாக அமர்ந்திருந்தார். திருட்டைக் கண்டுபிடிக்க தான் செய்த சாகசம் எல்லாம் வீணாகப் போய்விட்டதே என்கிற சோகம் போல. ‘அத்தனையும் நடிப்பா கோப்பால்?!’ என்பது போன்ற துயர எக்ஸ்பிரஷன் அவரின் முகத்தில் தென்பட்டது.

ராபர்ட் செய்த சீரியஸ் காமெடி

இன்னொரு சோக முகம் ராஜாவுடையது. தளபதியாரும் ராணியாரும் தனியாக ரகசியம் பேசிச் சென்ற காட்சியைப் பார்த்த போது அவரது நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. இத்தனை மணி நேரங்கள் தன்னுடனே அமர்ந்திருந்த ராணி, தன்னிடம் துளி கூட எதையும் சொல்லாமல் கடப்பாறையை விழுங்கி இஞ்சி கஷாயம் குடித்தது போல் கமுக்கமாக இருந்துவிட்டாரே என்று ராஜாவிற்கு சுயபச்சாதாபமும் ஆதங்கமும் வருத்தமும் துயரமும் கவலையும் அழுகையும் ஏற்பட்டது.

கண்ணீருடன் வெளியேறிய ராபர்ட், கார்டன் ஏரியாவில் குப்புறப்படுத்துக் கொண்டு குமுறி அழ, மற்றவர்கள் செய்த சமாதானங்கள் எடுபடவில்லை. ‘இது சீக்ரெட் டாஸ்க் மாஸ்டர்… அதான் சொல்லியிருக்க மாட்டாங்க’ என்று மற்றவர்கள் விளக்கம் அளிக்க “அதெல்லாம் ஓகே… ஆனா ராணியை ரொம்ப நம்பினேன்… ஒரு க்ளூவாவது கொடுத்திருக்கலாம். இப்படி அசிங்கமா போச்சே குமாரு… மக்கள் முன்னாடி எப்படி முழிப்பேன்..?” என்றெல்லாம் அனத்தினார். “நீங்க ராஜாவா செயல்படல. மக்கள்ல் ஒருத்தரா இருந்தீங்க… அத்தனை நல்ல ராஜா நீங்க” என்று மகள் குயின்சி சொன்ன சமாதான அல்வா கூட எடுபடவில்லை.

“நீங்க போய் பேசுங்க…” என்று அசிம் கேட்டுக் கொள்ள, சங்கடத்துடன் வெளியே சென்ற ரச்சிதா “சொல்லக்கூடாதுன்னு எந்த உள்நோக்கமும் இல்லை. இது சீக்ரெட் டாஸ்க்… திட்டறதா இருந்தா திட்டிடுங்க… உங்க கால்ல கூட விழறேன்…” என்று தேவைக்கும் அதிகமாகவே மன்னிப்பு கேட்டும் “நீ போ. நான்தான் லூஸூ” என்று உண்மையை நேர்மையாக ஒப்புக் கொண்டார் ராஜா. நேராக பாத்ரூம் சென்ற மகாராணியார், கதவைப் பூட்டிக் கொண்டு குமுறி அழுத சத்தம் தேசமெங்கும் எதிரொலித்தது. “ஏண்டி… நீயும் சேர்ந்துக்கிட்டு இப்படிப் பண்றே..?” என்று ஆறுதல் சொல்ல வந்த மைனாவிடம்… “நம்பிக்கைத் துரோகம், முதுகில குத்திட்டன்னு என்னென்னமோ சொல்றாரு” என்று கலங்கினார் ரச்சிதா.

பிறகு நடந்த காட்சிகள் இன்னமும் காமெடியைக் கூட்டியது. ராணி தன்னையே கயிற்றால் அடித்துக் கொண்டிருந்து விட்டு எழுந்து செல்ல, பின்னால் பூனை மாதிரி வந்த ராஜா, அந்தக் கயிற்றை எடுத்து ‘ஏன் என் ராணியை அடிச்சே?’ என்பது மாதிரி அந்தக் கயிற்றிடம் கோபித்துக் கொண்டு அதைத் தூக்கிப் போட்டார்.

ராபர்ட்டின் செயல்கள் ஒருபக்கம் காமெடியாகத் தெரிந்தாலும் இன்னொரு பக்கம் உணர்வுபூர்வமாகப் பார்த்தால் சற்று சென்டியாகத்தான் இருந்தது. ரச்சிதா மீது அவர் வைத்திருந்த ஆழமான ‘க்ரஷ்’ஷின் வெளிப்பாடு இது. தன்னிடம் ரகசியத்தை ஒரு துளி கூட ராணி சொல்லவில்லையே என்பதை விடவும் ‘தளபதியுடன் ராணி ரகசியம் பேசினாரே’ என்பதுதான் மிகுந்த மனவேதனையை அவருக்குத் தந்திருக்கும்.

ஆனால் ஒரு தேசத்தை ஆளும் ராஜா இப்படிப்பட்ட பல சதித்திட்டங்களையும் அதிர்ச்சியான தகவல்களையும் எப்போதும் எதிர்கொள்ளும் அளவிற்கான துணிச்சலைக் கொண்டிருக்க வேண்டும். இத்தனை வீக்கான ராஜாவாக இருந்தால் இரண்டே நாள்களில் பதவி விலகி காட்டுக்குப் போக வேண்டியதுதான். மகாராணியாகவே இருந்தாலும் கூட எவரையும் எளிதில் நம்பி விடக்கூடாது என்பதுதான் இதிலுள்ள அரசியல் பாடம்.

சுரேஷ் கண்ணன்

விகடன்

Leave A Reply

Your email address will not be published.