‘பட்ஜட்’டை எதிர்க்காமல் இருக்க கூட்டமைப்பு எம்.பிக்கள் தீர்மானம்.

2023ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பை எதிர்த்து வாக்களிப்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் இன்று காலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“வரவு – செலவுத் திட்டத்தில் எதிர்த்து வாக்களிக்கக் கூடிய – தமிழ் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகின்ற பல விடயங்கள் உள்ளன. எனினும், தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அறிவித்துள்ளார். இந்தச் சமயத்தில் நாங்கள் எதிர்த்து வாக்களிப்பது சில வேளைகளில் அந்த முயற்சியைக் குழப்புவதாக அர்த்தப்படலாம். எம்மை நோக்கி அப்படியான குற்றச்சாட்டும் வரக்கூடும். அதைத் தவிர்ப்பதற்காக வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பை எதிர்த்து வாக்களிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

எனவே, இன்று மாலை நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் தாம் கலந்துகொள்ளாமல் இருக்கத் தீர்மானித்துள்ளோம் என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.