தமிழக காங்கிரஸில் நிலவும் கோஷ்டி பூசல் : காங்., எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் டெல்லி பயணம்!

காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த வாரம் கட்சித் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கு நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன்தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு அவருக்கு உத்தரவிட்டது. எனினும், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ரூபி மனோகரன் 2 வாரங்கள் அவகாசம் கோரினார். இந்த விவகாரத்தில் உரிய விளக்கம் தரும் வரை, ரூபி மனோகரனை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அறிவித்தார்.

எனினும், இந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குண்டுராவ் தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக, கே.ஆர்.ராமசாமி டெல்லி செல்கிறார். அங்கு அகில இந்திய காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ஏ.கே.அந்தோணியை சந்தித்து அவர் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒழுங்கு நடவடிக்கை குழு எடுத்த முடிவை நிறுத்தி வைக்க குண்டு ராவுக்கு அதிகாரம் இல்லை என்றும், ரூபி மனோகரன் கூறுவது போல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்க முடியாது எனவும் கே.ஆர்.ராமசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்த அதிரடிக்கு தயாராகி இருக்கிறார்கள். காங்கிரசுக்கு மொத்தம் 18 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர்களில் 11 பேர் இன்று டெல்லி சென்றுள்ளார்கள். இந்தக் குழுவில், ராஜேஷ் குமார், பிரின்ஸ், பழனி நாடார், முனிரெத்தினம், கரு.மாணிக்கம், ஹசன் மொளலானா, கணேஷ், ராஜ்குமார், ஊர்வசி அமிர்தராஜ், ராஜ்குமார், ராதாகிருஷ்ணன் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை மீதும் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.