நாக்கில் பிரச்சினை இருந்த குழந்தைக்கு பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை! மருத்துவமனை விளக்கம்

நாக்கில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு, ஏன் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என அரசு மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், குழந்தைக்கு சிறுநீர் பாதையில் முன் தோல் குறுக்கமாக இருந்ததால் பிறப்புறுப்பில் சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தை தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் ராஜாஜி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதிதாக பிறந்த குழந்தைக்கு நாக்கில் பிரச்சினை
விருதுநகர் மாவட்டம் அமீர்பாளையத்தை சேர்ந்த கார்த்திகா, அஜித்குமார் தம்பதிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குழந்தை பிறந்தது. ஆனால், புதிதாகப் பிறந்த குழந்தையின் நாக்குக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்பட்டது மற்றும் அவர் பிறந்த சில நாட்களில் ராஜாஜி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இரண்டாவது அறுவை சிகிச்சைக்காக தம்பதியினர் ஒரு வருடம் கழித்து திரும்பி வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மாத தொடக்கத்தில் அஜீத்தும் கார்த்திகாவும் இரண்டாவது அறுவை சிகிச்சைக்காக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழக்கமான பரிசோதனைக்கு பிறகு குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் சென்றனர்.

நாக்குக்குப் பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை
ஆனால், குழந்தையின் நாக்குக்குப் பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவர்கள் உடனடியாக மருத்துவமனை ஊழியர்களிடம் இது குறித்து கேட்டபோது, ​​​​குழந்தை மீண்டும் ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்டு, நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதையடுத்து, குழந்தைக்கு ஏன் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என குழந்தையின் தந்தை விளக்கம் கேட்டபோது, ​​அவசர நிலை என்பதால் அவரிடம் அனுமதி கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தந்தை காவல்நிலையத்திலும், ராஜாஜி மருதுதவமனை டீனிடம் புகார் அளித்துள்ளார்.

மருத்துவமனை அளித்த விளக்கம்
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பாக நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு ராஜாஜி மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், குழந்தைக்கு நாக்கு ஒட்டியிருப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்ததையடுத்து வெற்றிகரமாக நாக்கிற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது குழந்தைக்கு சிறுநீர் பாதையில் முன் தோல் குறுக்கமாக இருந்ததால் மீண்டும் ஒரு முறை மயக்க மருந்து கொடுக்கப்படாமல் பிறப்புறுப்பில் சுன்னத் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை நல்ல முறையில் உணவு உண்பதாவும், சிறுநீர் கழிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.