நாங்க வேலைய விட்டு அனுப்பல, அவங்கதான் விரும்பி வெளிய போனாங்க -அமேசான்

கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவற்றின் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்கள் சம்பள குறைப்பு, ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. ட்விட்டர், பேஸ்புக், ஹெச்பி, நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் கணிசமான ஊழியர்களை வேலையை விட்டு நீக்கின. அந்த வரிசையில் கடந்த வாரம் உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

வெற்றிகரமான, லாபமில்லாத பிரிவுகளில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதாக அமேசான் அறிவித்தது. இந்த நடவடிக்கை மூலம் கிட்டத்தட்ட பத்தாயிரம் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். உலகம் முழுவதும் சுமார் பதினாறு லட்சம் ஊழியர்களை கொண்டுள்ள அமேசான் நிறுவனத்தில் 3 சதவீதம் ஊழியர்கள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது அந்நிறுவன வரலாற்றின் மிகப்பெரிய ஆட்குறைப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவிலும் இந்த நடவடிக்கை காரணமாக 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்தனர். அமேசான் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பலரும் குரல் கொடுத்த நிலையில், தொழிலாளர் துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசின் அழுத்தத்தை தொடர்ந்து அமேசான் நிறுவனம் நோட்டீஸ்சிற்கு பதில் அளித்துள்ளது. அதில், “நாங்கள் எந்த ஊழியர்களையும் கட்டாயப்படுத்தி வேலையை விட்டு நீக்கவில்லை. மாறாக விருப்ப பிரிவு அல்லது ஓய்வு எனப்படும் Voluntary Separation Program (VSP) முறையில் தான் ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்கள். அவர்களுக்கு உரிய சலுகைகளை தந்த பின்னர் தான் வேலையை விட்டு நிறுத்தப்பட்டார்கள்” என்று விளக்கம் அளித்தது.

இதன் மூலம் இந்தியாவில் நேரடியாக பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ளாமல் ஊழியர்களே விருப்பத்துடன் தாமாக முன்வந்து வெளியேறும் முறையை அமேசான் பயன்படுத்தி ஆட்குறைப்பை மேற்கொண்டது தெரியவந்துள்ளது. இந்த முறையை பயன்படுத்த ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.