இராணுவத்துக்குக் காணி சுவீகரிப்பு: எதிர்த்து மக்கள் மாபெரும் போராட்டம்.

யாழ்., காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே/44 கிராம சேவகர் பிரிவில் உள்ள 44 குடும்பங்களுக்குச் சொந்தமான 11 ஏக்கர் காணிகளை இராணுவத்துக்கு அளவிடுவதற்கு அப்பகுதி மக்கள் இன்று பாரிய எதிர்ப்பை வெளியிட்டனர்.

குறித்த காணியை அளவிடுவதற்கு வந்த நில அளவை திணைக்களத்தினர் மக்களின் எதிர்ப்பையடுத்து அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

“நாங்கள் சொந்தக் காணிகள் இல்லாமல் வாடகை வீடுகளில் இருந்து மழையிலும் தண்ணீரிலும் அல்லல்படுகின்றோம். எங்களது நிலையைக் கருத்தில் கொள்ளாது இராணுவத்தினருக்குக் காணி அளவிடுவதற்கு முயற்சிக்கின்றனர். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அண்மையில் வடக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மக்களது காணிகளை மக்களுக்கே வழங்குவதாக ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். இது இவ்வாறு இருக்க நில அளவை திணைக்களத்தினர் இன்றும் காணி அளவிடுவதற்கு வருகை தந்தனர்.

காரைநகர் பிரதேச செயலர் தமக்குக் காணி அளவிடுமாறு அறிவித்தல் வழங்கிய நிலையிலேயே தாங்கள் காணி அளவிடுவதற்கு வருகை தந்ததாக நில அளவைத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

காணி சுவீகரிப்பு நடவடிக்கை தொடருமானால் எங்களது போராட்டங்களும் தொடரும்.

இந்தப் போராட்டத்தில் காணியின் உரிமையாளர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், சமூகமட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.