தனியார் கல்வி நிலையத்தில் பலவந்தமாக மாணவனுக்கு மதுபானம்: வீதியில் வீழ்ந்து படுகாயம்!

கிளிநொச்சியில் தனியார் கல்வி நிலையத்தில் 16 வயது மாணவனுக்கு குடிநீருடன் மதுபானத்தை கலந்து ஏனைய மாணவர்கள் பருக்கியுள்ளனர். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் தலையில் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி நகருக்கு அண்மையாகவுள்ள தனியார் கல்வி நிலையத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கல்வி நிலையத்தில் காயமடைந்த மேற்படி மாணவனின் சக மாணவர்கள் போதைப் பழக்கமுடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாணவன் எந்தவொரு போதைப்பொருள்களையும் பயன்படுத்துவதில்லை என்றும், கல்வியில் மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெறுபவன் என்றும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் குடிநீருடன் மதுபானத்தைக் கலந்து மாணவனைக் குடிக்குமாறு ஏனையோர் திணித்துள்ளனர்.

இதையடுத்து சைக்கிளில் செல்லும் போது மாணவன் வீதியில் விழுந்து தலையில் படுகாயமடைந்துள்ளார்.

உடனடியாகக் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாணவன் மாற்றப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம், பொலிஸார் ஊடாக உரிய தரப்பினருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.