பாதுகாப்பற்ற ரயில் கடவையைச் சீரமைத்து காவலாளியை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்!

வவுனியா, மெனிக்பாம் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையைச் சீரமைத்துக் காவலாளியை நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

மெனிக்பாம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்திருந்த நிலையிலே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

குறித்த கடவையில் ஐந்து விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததுடன் அண்மையில் பஸ் ஒன்றும் விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கிராமத்தில் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றன எனவும், குறித்த கடவையினூடாகப் பாதுகாப்பற்ற போக்குவரத்தைத் தாம் மேற்கொண்டு வருகின்றனர் எனவும், அத்தோடு ரயில் சீரான நேரத்தில் வருகை தராததால் எந்த நேரத்தில் ரயில் வரும் என்று தெரியாத நிலையிலே குறித்த பாதையினூடாகப் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

ரயில் கடவையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபா மாத்திரமே ஊதியமாக வழங்கப்படுவதால் யாரும் குறித்த பணிக்குச் செல்ல விரும்புவதில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுட்டிக்காட்டினர்.

போராட்ட இடத்துக்கு வருகை தந்த பறயனாளங்குளம் பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி குறித்த கடவையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து மூவர் விண்ணப்பித்துள்ளனர் எனவும், அதற்குரிய நடவடிக்கை மிக விரைவில் எடுக்கப்படும் எனவும், சமிக்ஞை விளக்கைப் பொருத்துவதற்கு ரயில் திணைக்களத்துக்குச் சிபார்சு செய்யப்பட்டுள்ளது எனவும், மக்களும் எழுத்து மூலமான கோரிக்கைக் கடிதத்தை ரயில் திணைக்களத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் தெரிவித்தார்.

இந்தப் போராட்டமானது சுமார் ஒரு மணித்தியாலயம் முன்னெடுக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.