கடந்தகால மனக்கசப்புக்களை மறப்போம்; நம்பிக்கை வைத்துப் பேச்சுக்கு வாருங்கள் ஜனாதிபதி ரணில் மீண்டும் அழைப்பு.

“கடந்த கால மனக்கசப்புக்களைப் பேசிக்கொண்டிருப்பதால் காலம்தான் வீண்விரயமாகும். வெளியாரின் தலையீடு இல்லாமல் நாம் ஒன்றுகூடி பேச்சு மூலம் தீர்வை அடைவோம். அதில் நம்பிக்கை வைத்து தமிழ்த் தலைவர்கள் செயற்படவேண்டும்.”

இவ்வாறு ஆலோசனை கூறியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

தமிழ் மக்களுக்கு பேச்சு மூலமான தீர்வு என்பது மாயக்காற்றாக மாறிக்கொண்டிருக்கும் கனவு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய ஆங்கில ஊடகத்துக்குத் தெரிவித்திருந்தார். நல்லாட்சி அரசின் காலத்தில் தமிழ்த் தரப்பின் கடும் எதிர்ப்புக்கும் மத்தியிலும், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சியில் முழுமையாக நம்பி ஈடுபட்ட ஒருவர் இவ்வாறான நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தியுள்ள சூழலில், உங்களின் தீர்வு முயற்சி எவ்வாறு முன்நகரப் போகின்றது என்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையின் தேசிய பிரச்சினைக்குப் பேச்சு மூலம் தீர்வு காண நாம் தயாராகவுள்ளோம். அதற்கான முதற்கட்டடமாக மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் விரைவில் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளோம். இதில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் பங்கேற்க வேண்டும் என நாம் விரும்புகின்றோம்.

கடந்த கால மனக்கசப்பான விடயங்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு இருப்பதால் காலம்தான் வீண்விரயமாகும்.

தேசியப் பிரச்சினையை – உள்ளகப் பிரச்சினையை நாம் அனைவரும் ஒன்றுகூடி பேசித் தீர்வைக்காண வேண்டும். இந்தநிலையில், வெளியகத் தலையீடுகள் எதற்கு?

தீர்வில் நாம் நம்பிக்கை வைத்துச் செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.