தமிழ் மக்களை விரட்டுவதற்கே வடக்கு கிழக்கில் இராணுவம்!

“தெற்கிலிருந்து தமிழ் மக்களை விரட்டி – வெளிநாடுகளுக்கு அனுப்பியமை போன்று, இன்று வடக்கு – கிழக்கில் வாழும் தமிழர்களை வெளிநாடுகளுக்கு விரட்டவும் – இடம்பெயரச் செய்யவும் பல நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கின்றது. இதற்குப் பாதுகாப்பாக – அனுசரணையாளர்களாக இருப்பது இராணுவத்தினரே.”

இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கு மாகாணத்துக்காக எந்தவொரு பொருளாதார மையங்களையும் அமைக்கப்போவதாக வரவு – செலவுத் திட்டத்தில் அரசு குறிப்பிடவில்லை. திருகோணமலையில் ஒரு பொருளாதார மையத்தை அமைக்கப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். சிங்களவர்களை அங்கு கொண்டுவந்து அந்த மையத்தை அபிவிருத்தி செய்யப் போகின்றார்கள்.

539 பில்லியன் ரூபா 2023இல் பாதுகாப்புச் செலவினமாக ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லா விதத்திலும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடித்து தங்கள் வசம் வைத்துக் கொண்டு சிவில் நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் முயற்சிக்கின்றார்கள்.

539 பில்லியன் ரூபா ஒதுக்குவதற்குக் காரணம் இராணுவத்தை இங்கு வைத்திருந்து வடக்கு மாகாண மக்களை அடக்கி வருங்காலத்திலே பொருளாதார காரணங்களுக்காக அவர்களை விரட்டும் ஒரு நிலையை எற்படுத்துவதே.

தெற்கிலிருந்து தமிழ் மக்களை விரட்டிவிட்டு – அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு, இப்போது வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் வாழும் தமிழ் மக்களை வெளிநாடுகளுக்கு விரட்டவும் – இடம்பெயரச் செய்யவும் பல நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.

இதற்கு முக்கிய பாதுகாப்பாக – அனுசரணையாளர்களாக இருப்பது இராணுவத்தினரே என்று நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.