சதத்தின் மூலம் சாதனை படைத்த வங்காளதேச வீரர் ஹசன் மிராஸ்.

இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் வங்காளதேச அணி திரில் வெற்றியை பெற்றதுடன், தொடரையும் வசப்படுத்தியது.

இதில் 6 விக்கெட்டுகளை விரைவாக பறிகொடுத்து தள்ளாடிய வங்காளதேச அணியை 7-வது விக்கெட்டுக்கு ஆல்-ரவுண்டர்கள் மக்முதுல்லாவும், மெஹிதி ஹசன் மிராசும் கைகோர்த்து காப்பாற்றினர்.

முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான மெஹிதி ஹசன் மிராஸ் இந்திய பந்து வீச்சை பின்னியெடுத்து உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். சதத்தை எட்ட கடைசி ஓவரில் அவருக்கு 15 ரன் தேவைப்பட்டது. ஷர்துல் தாக்குர் வீசிய இறுதி ஓவரில் 2 சிக்சர் பறக்க விட்ட அவர் கடைசி பந்தில் தனது ‘கன்னி’ சதத்தை பூர்த்தி செய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுக்கு 271 ரன்கள் சேர்த்தது. மெஹிதி ஹசன் மிராஸ் 100 ரன்களுடனும் (83 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), நசும் அகமது 18 ரன்களுடனும் (11 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.

அவர்கள் கடைசி 10 ஓவர்களில் 102 ரன்கள் குவித்தனர். பின்னர் 272 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. ஆனால் 50 ஓவர்களில் இந்திய அணியால் 9 விக்கெட்டுக்கு 266 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 5 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசம் திரில் வெற்றியை ருசித்தது.

இதனிடையே வங்காளதேச அணியின் ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் 8-வது வரிசையில் களம் புகுந்து சதம் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டி வரலாற்றில் 8 மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி ஒரு வீரர் சதம் விளாசுவது இது 2-வது முறையாகும்.

இதற்கு முன்பு அயர்லாந்தின் சிமி சிங் 2021-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 8-வது வரிசையில் இறங்கி 100 ரன்கள் அடித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.