போலீஸ் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 3 பேர் பலி.

இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தின் தலைநகர் பாண்டுங்கில் அஸ்தானா அன்யார் என்கிற இடத்தில் போலீஸ் நிலையம் ஒன்று உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தில் நேற்று காலை போலீசார் வழக்கமான அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்தார்.

கையில் கத்தியுடன் வந்திருந்த அந்த நபரை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை சுற்றிவளைத்தனர். அப்போது அந்த நபர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு கரும்புகை மண்டலம் எழுந்தது. குண்டு வெடிப்பை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் இருந்தவர்கள் உயிர் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த தாக்குதலில் தற்கொலைப்படை பயங்கரவாதியும், போலீஸ் அதிகாரிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 7 போலீசாரும், பொதுமக்களில் ஒருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் 8 பேரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2002-ம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலி தீவில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். இதில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் ஆவர்.

இந்த தாக்குதலுக்கு பின் இந்தோனேசியா தொடர்ந்து பல ஆண்டுகளாக பயங்கரவாத இயக்கங்களுடன் போராடி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுலவேசி மாகாணத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டத்தின்போது ஒரு தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 2 பேர் பலியானதும், 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததும் நினைவுகூரத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.