பாகிஸ்தான் வான்வெளி தடை: ஏர் இந்தியாவுக்கு $600 மில்லியன் இழப்பா?

பாகிஸ்தான் தனது வான்பகுதியில் ஏர் இந்தியா உள்ளிட்ட இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. இதனால், ஏர் இந்தியா தனது விமானப் பாதைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த தடை ஏறக்குறைய ஒரு வருடம் நீடித்தால், ஏர் இந்தியாவுக்கு கூடுதலாக 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுகட்ட ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசிடம் நிதி உதவி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயணப்பாதை மாற்றம் காரணமாக விமானங்களின் பயண நேரம் அதிகரிப்பதோடு, எரிபொருள் செலவும் கணிசமாக உயரும். ஏர் இந்தியா இந்திய அரசாங்கத்திடம் மானியம் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், நிலைமையை ஆராய்ந்து ஏற்பட்டிருக்கும் நிதி இழப்பு எவ்வளவு என்பதை கணக்கிட்டு நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் சூழல் நிலவுகிறது. இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் பாகிஸ்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

டாடா குழுமம் நிர்வகிக்கும் ஏர் இந்தியா நிறுவனம் தற்போது தனது நிர்வாகத்தையும் கட்டமைப்பையும் பெரிய அளவில் மாற்றி வருகிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானின் வான்வெளி தடை ஏர் இந்தியாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

2023-2024 நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனம் 520 மில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்தாலும், 4.6 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போன்ற விமான நிறுவனங்களும் இந்தியாவிலிருந்து ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு பாகிஸ்தான் வான்வழியாக செல்வது வழக்கம்.

Leave A Reply

Your email address will not be published.