ரணில் அரசை ஆட்டம் காண வைக்க இன்னும் 10 எம்.பிக்களே வேண்டும்! – சஜித் அணியின் செயலர் சூளுரை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முதலாவது அரசியல் அஸ்திரம் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஏவப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சூளுரைத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு கொழும்பு, பௌரை – கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“எமது அணியில் சிறந்த தலைவர் இருக்கின்றார். இணைந்து பணியாற்றக்கூடிய உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, எமது பயணம் தொடரும். நாட்டு மக்கள் எமது பக்கமே நிற்கின்றனர். அடுத்து நடைபெறும் தேர்தலில் இது தெரியவரும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான அறைகூவலை தேர்தல் ஆணைக்குழு விடுக்க வேண்டும். அதற்கான காலம் வந்துவிட்டது.

இந்த ஆட்சி நிச்சயம் கவிழ்க்கப்படும். ஆரம்பத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக 134 வாக்குகள் நாடாளுமன்றத்தில் இருந்தது. அது தற்போது 123 ஆக குறைவடைந்துள்ளது. இன்னும் 10 வாக்குகளைக் குறைத்தால் ஆட்டம் காண வேண்டிவரும். எதிரணிகளுடன் இணைந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இதற்கான அடித்தளம் இடப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.