இந்தியா – சீனா படைகள் இடையே மோதல்

அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் இந்தியா – சீனா படைகள் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 3 நாட்களுக்கு முன் நடந்த இந்த மோதல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சீன எல்லையோரம் அமைந்து இருக்கும் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் வழக்கம்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே திடீரென மோதல் வெடித்தது. ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்தியா – சீனா மோதல்

இந்த தாக்குதலில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும், மோதல் ஏற்பட்ட சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்று உள்ளனர். இந்த மோதலை தொடர்ந்து எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் அமர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

3 நாட்கள் கழித்து வெளியான தகவல்

இதில் இரு நாட்டு ராணுவ வீரர்களை அமைதிப்படுத்துவது பற்றியும் தாக்குதல் நடந்த இடத்திலும் இயல்பு நிலையை கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 9 ஆம் தேதி நடந்த இரு தரப்பு மோதல் குறித்த தகவலை 3 நாட்கள் கழித்து தற்போதுதான் பிரபல செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிராமங்களை ஆக்கிரமிக்கும் சீனா

அருணாச்சல பிரதேச எல்லை பகுதியை சீனா கடந்த சில ஆண்டுகளாகவே ஆக்கிரமித்து வருகிறது. அதில், குடியிருப்புகள், சாலைகளை கட்டிய சீனா ஒரு சிறிய நகரத்தையே உருவாக்கி இருக்கிறது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், சாட்டிலைட் படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினர்.

கல்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறல்

இதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் ஊடுருவலை தடுக்க முயன்ற இந்திய பாதுகாப்பு படையினருக்கும் சீன ராணுவத்தினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதனால் ஏற்பட்ட தாக்கம் இதுவரை குறையவில்லை

உரிமைகோரும் சீனா

இரு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்தியா – சீனா ராணுவ படைகள் மெல்ல மெல்ல தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன. இதனை பயன்படுத்தி சீனா இந்திய எல்லை பகுதிகளில் கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. அருணாச்சல பிரதேச மாநிலத்தை போன்றே லடாக்கில் உள்ள இந்திய எல்லையோர கிராமங்களையும் சீனா உரிமை கோரி வருகிறது. குறிப்பாக இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக்கின் பேன்காங் சோ பகுதியிலும் சீனா வேகமாக ராணுவ நகரம் ஒன்றை உருவாக்கி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.