மியான்மர் பள்ளி மீது ராணுவத் தாக்குதல்; 20 மாணவர்கள் உயிரிழப்பு!

மியான்மரில் ராணுவம் வீசிய வெடிகுண்டு வெடித்து பள்ளி மாணவர்கள் 20 பேர் உயிரிழந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ராணுவ ஆட்சி நடக்கிறது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோர், சிறையிலும், வீட்டுக் காவலிலும் அடைக்கப்படுகின்றனர்.

அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில், அரசுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் போர் நடத்தி வருகின்றன.

கிளர்ச்சி படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில், ராணுவம் போர் விமானங்களை பயன்படுத்தி உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கூட, போர் விமானங்களில் சென்று தாக்குதல் நடத்துவதை மியான்மர் ராணுவம் நிறுத்தவில்லை. இதுவரை தாக்குதல் சம்பவங்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் மத்திய மியான்மரின் தபாயின் நகரத்தில் உள்ள கிராமத்தின் மீது ராணுவத்தினர் விமானங்களில் இருந்து தாக்குதல் நடத்தினர். அந்த பகுதியில் இருந்த பள்ளிக்கூடம் மீது ஒரு போர் விமானம் வீசிய வெடிகுண்டு விழுந்து வெடித்தது. இந்த தாக்குதலில், பள்ளி மாணவர்கள் 20 பேர் மற்றும் ஆசிரியர்கள் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மியான்மரில் உள்நாட்டு போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.