கொழும்பை உலுக்கிய படுகொலை: அரசியல்வாதிகளிடமும் வாக்குமூலம்!

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர், கொழும்பில் பட்டப்பகலில் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 15 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலைப் பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்றுமுன்தினம் மாலை பொரளை பொது மயானத்துக்கு அருகில் கைகளும், கால்களும் கட்டப்பட்டு, கழுத்தில் பலத்த காயங்களுடன், காரில் இருந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்தார்.

இந்தநிலையில், பொரளை மயானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தினேஷ் ஷாப்டரின் காரில் இருந்த சாட்சியங்கள் மற்றும் சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளுக்கு அமைய, சந்தேகநபர்களை அடையாளம் காணபதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் பிரைன் தோமஸிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்றுமுன்தினம் இரவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட வர்த்தகரிடம், பிரைன் தோமஸ் பெற்றுக்கொண்ட கோடிக்கணக்கான ரூபா பணம் தொடர்பான பிரச்சினை குறித்தும் இதன்போது விரிவாக வினவப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடல் ஒன்றுக்குச் செல்வதாக தமது மனைவிடம் கூறிவிட்டு நேற்றுமுன்தினம் பிற்பகல் 2 மணி முதல் 3 மணிவரையான காலப்பகுதியில், கொள்ளுப்பிட்டி, மலர் வீதிப் பகுதியில் உள்ள தமது வீட்டிலிருந்து தினேஷ் ஷாப்டர் வெளியேறியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், தம்மிடமிருந்து கோடிக்கணக்கான ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்ட கிரிக்கெட் வர்ணனையாளர் பிரைன் தோமஸைச் சந்திக்கச் செல்வதாக, தமது செயலாளரிடம் தினேஷ் ஷாப்டர் கூறியிருந்தார் என்று பொரளை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், நேற்றுமுன்தினம் இரவு பிரைன் தோமஸின் வீட்டுக்குச் சென்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில், பிரைன் தோமஸுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்து, கொழும்பு மேலதிக நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு அமைய, பொரளைப் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்வைத்த விண்ணப்பத்துக்கு அமைய, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தினேஷ் ஷாப்டரின் தொலைபேசித் தரவுகளை வழங்குமாறு, சம்பந்தப்பட்ட தொலைபேசிச் சேவை நிறுவனங்களுக்கும் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
……..

Leave A Reply

Your email address will not be published.