வெளிநாட்டவர்களின் கைவரிசை: ATM இயந்திரங்களை உடைத்து கோடி ரூபா கொள்ளை

தென்னிலங்கையில் ATM இயந்திரங்களை உடைத்து வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு வெளிநாட்டிலிருந்து வந்துள்ள வெள்ளையர்கள், இந்தக் கொள்ளைக்காக கறுப்பு நிற காரொன்றில் வந்ததாக புலனாய்வுத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
ரூபாய் 1 கோடிக்கு மேலான இந்த வங்கிக் கொள்ளையை நேற்று அதிகாலை இரு வெளிநாட்டவர்களே மேற்கொண்டுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்கள் வந்த காரில் டிரைவரும் மற்றொரு நபரும் இருப்பது சிசிடிவி காட்சிகளில் தெளிவாக தெரிந்துள்ளது.

நேற்று அதிகாலை ஹிக்கடுவ, கராப்பிட்டிய மற்றும் பத்தேகமவில் உள்ள மக்கள் வங்கியின் ATM இயந்திரங்களில் இருந்து இந்த இரண்டு வெளிநாட்டவர்களும் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திருடியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கணணி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், ஏடிஎம் இயந்திரங்களுடன் தொடர்புடைய கணினி தரவு அமைப்புக்குள் நுழைந்து இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் இன்று காலை தெரிவித்துள்ளது.

ஹிக்கடுவ நகரில் உள்ள மக்கள் வங்கியின் ATM இயந்திரத்தின் மீது அதிகாலை 1.30 மணியளவில் இந்த இரண்டு வெள்ளை வெளிநாட்டவர்களும் கணணி தாக்குதலை நடத்தியுள்ளனர். அதன்பின் CCTV கேமராவை மூடிவிட்டு நாற்பத்தாறு லட்சத்து எட்டாயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.

பின்னர் காலி கராபிட்டிய நகரிலுள்ள மக்கள் வங்கியின் ATM இயந்திரத்திற்கு வந்துள்ளனர். அதிகாலை 3.22 மணிக்கு அங்கு சென்றவர்கள் , இரண்டு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த இரண்டு பேரும் பணத்தை எடுத்துக்கொண்டு ஆங்கிலத்தில் பேசி விட்டு, மறந்து போன ஒன்றை மீட்டெடுக்க மீண்டும் ATM பூத்துக்கு திரும்பி வந்த போது , அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரி சந்தேகத்தின் பேரில் ATM பூத்தை சோதனை செய்தபோது, ​​அங்கிருந்த சிசிடிவி கேமரா அமைப்பு கறுப்பு கவர்களால் மூடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.

இந்த இரண்டு வெளிநாட்டவர்களும் பத்தேகம நகரில் உள்ள அரச வங்கியின் ATM க்கு அதிகாலை 4:00 மணியளவில் சென்று , அங்கும் 57 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர், நாரஹேன்பிட்டியில் உள்ள அரச வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தின் மீது வெள்ளையர்கள் இருவர் தாக்குதல் நடத்தியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் , குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.