விமர்சனம் வாரிசு.

சரத்குமார் மிகப்பெரிய தொழிலதிபர். இவருக்கு ஶ்ரீகாந்த், ஷாம், விஜய் என மூன்று மகன்கள். தன்னை போலவே மூன்று மகன்களும் தொழிலதிபராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

மேலும், குடும்பத்தையும் தொழிலையும் கவனிக்க மூன்று மகன்களில் ஒருவரை போட்டி வைத்து வாரிசாக அறிவிக்க நினைக்கிறார். இது பிடிக்காத விஜய், தந்தை சரத்குமாருடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.

7 ஆண்டுகள் கடந்து செல்கிறது. சரத்குமாருக்கு 60-வது திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கிறது. தாயின் கட்டாயத்தின் பெயரில் மீண்டும் வீட்டுக்கு வருகிறார் விஜய். வீட்டிற்கு வந்த பிறகு குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு அண்ணன்கள் ஶ்ரீகாந்த், ஷாம், இருவரும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

தன்னுடைய வாரிசாக விஜய்யை அறிவிக்கிறார் சரத்குமார். இதனால், அண்ணன்கள் இருவரும் விஜய்க்கு எதிராக திரும்புகிறார்கள்.

இறுதியில் பிரிந்த குடும்பத்தை விஜய் ஒன்று சேர்த்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் விஜய், தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். முதல் பாதியில் அமைதியான அம்மா பாசம் கொண்ட விஜய்யையும் இரண்டாம் பாதியில் ஆக்ஷன், காமெடி, தந்தை பாசம் கொண்ட விஜய்யையும் பார்க்க முடிகிறது. வழக்கம் போல் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் விஜய். ஆக்ஷன் காட்சிகளில் துவம்சம் செய்து இருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சியை காண்பித்து இருக்கிறார். படத்திற்கு பெரிய பலம் சரத்குமார். பெரிய தொழிலதிபராகவும், மகனின் ஆறுதலுக்கு ஏங்கும் தந்தையாகவும் ரசிக்க வைத்திருக்கிறார்.

பெரிய அண்ணன் ஶ்ரீகாந்த் சென்டிமென்ட் காட்சிகளிலும், சின்ன அண்ணன் ஷாம் கிளைமாக்ஸ் காட்சியிலும் கவனிக்க வைத்து இருக்கிறார்கள். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பிரகாஷ் ராஜ். ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார் யோகிபாபு. பிரபு, கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். ஒரு காட்சியில் மட்டுமே வந்தாலும் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

குடும்பம், பாசம், சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி கலந்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வம்சி பைடிபைலி. மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை போக போக வேகம் எடுக்கிறது. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

முதல் பாகத்தின் வேகத்தை கூட்டி இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். சம்யுக்தா, சதீஷ் ஆகியோருக்கு காட்சிகள் கொடுத்து இருக்கலாம். வழக்கமான கிளைமாக்ஸ் போல் இல்லாமல் வித்தியாசமாக காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு.

தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். தீ தளபதி பாடல் மாஸாகவும், ரஞ்சிதமே பாடல் தாளமும் போட வைக்கிறது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். பழனி கார்த்திக் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது. ஒரு சில கிராபிக்ஸ் காட்சிகள் பெரியதாக எடுபடவில்லை.

Leave A Reply

Your email address will not be published.