”நாட்டு.. நாட்டு” பாடல் பற்றிய சுவாரசியங்கள்.

ஆஸ்காருக்கு அடுத்தபடியாக உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப்ஸ் விருதை ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் இடம் பெறும் ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்று இந்திய திரை உலகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் ஆங்கிலேய இளைஞருக்கு போட்டியாக நடனமாடும் காட்சி பார்ப்பவர்களையும் துள்ளல் போட வைக்கும் நடன அசைவுகளை கொண்டது. அந்த அளவுக்கு இசையமைப்பாளர் கீரவானியின் இசை வடிவமும், பிரேம் ரக்‌ஷித்தின் நடன அமைப்பும் இருந்தது.

இந்த பாடலை எழுதிய சந்திரபோஸ், ‘‘90 சதவீத பாடலை அரை நாளில் எழுதிவிட்டேன். ஆனால் மீதமுள்ள 10 சதவீத பாடல் வரிகளை எழுதுவதற்கு ஒன்றே முக்கால் வருடம் ஆகிவிட்டது. எனது கடின உழைப்பு, முயற்சி, பொறுமைக்கு பலன் கிடைத்துள்ளது’’ என்றும் பெருமிதத்தோடு சொல்கிறார்.

இந்த பாடலை படம் பிடிப்பதற்கும், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் நேர்த்தியாக நடன அசைவுகளை வெளிப்படுத்துவதற்கும் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார்கள். இதுபற்றி ஜூனியர் என்.டி.ஆர். சொல்கிறார். ‘‘நாட்டு நாட்டு பாடல் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. ஒட்டுமொத்த படத்தின் இறுதி கட்டத்தில்தான் இந்த பாடலை படமாக்கினோம். ஏற்கனவே படத்திற்காக 65 இரவுகள் கஷ்டப்பட்டு நடித்தோம். இந்த பாடலுக்கு நடனமாடும்போதும் ரொம்பவே சித்ரவதைகளை அனுபவித்தோம். இயக்குனர் ராஜமவுலி, இருவரின் நடன அசைவுகளும் சரியான நிலையை அடைவதற்காக எங்களை ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டார்.

அந்தப் பாடலை 12 நாட்கள் படமாக்கினோம். பாடலை ஒத்திகை பார்ப்பதற்கு மட்டுமே 7 நாட்களை ஒதுக்கினோம். இரவு 11.30 மணிக்கு தூங்க செல்வோம். மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவோம். எங்களின் கைகளும், கால்களும் ஒரே மாதிரியான நடன அசைவுகளை கொண்டிருக்கிறதா என்று மானிட்டரில் ராஜமவுலி சரிபார்த்துக்கொண்டிருப்பார். நான் பல பாடல்களுக்கு நடனமாடியுள்ளேன். ஆனால் `நாட்டு நாட்டு’ என்றென்றும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்’’ என்கிறார்.

கோல்டன் குளோப் விருது பெற்றதும் இந்த பாடலுக்கான மவுசு அதிகரித்துவிட்டது. இந்த பாடலுக்கான அர்த்தத்தை பலரும் இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ‘‘வயல்களின் புழுதியில் குதிக்கும் ஆக்ரோஷமான காளை போல.. உள்ளூர் அம்மன் திருவிழாவில் முன்னணி நடனக் கலைஞர் நடனமாடுவது போல.. மரச் செருப்புகளை அணிந்து கொண்டு குச்சியை வைத்து விளையாடுவது போல.. என் பாடலைக் கேளுங்கள்’’ என்ற அர்த்தத்தில் அந்த பாடலை எழுதி இருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.