5 தமிழ்க் கட்சிகளின் கூட்டணி: அலட்டிக்கொள்ள விரும்பவில்லை! – தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்.

“பல கட்சிகள் உருவாகலாம், கட்சிகளைப் பயன்படுத்தி பல கூட்டணிகள் – கூட்டமைப்புக்கள் அமையலாம். ஆனால், தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி எது என்பதைத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளால் நிரூபித்துக் காட்டுவார்கள். எனவே, 5 தமிழ்க் கட்சிகளைக் கொண்டு யாழ்ப்பாணத்தில் நேற்று உருவான புதிய கூட்டணி தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய 5 தமிழ்க் கட்சிகளும் இணைந்து புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் நேற்று கைச்சாத்திட்டுள்ளன. 5 தமிழ்க் கட்சிகளும் ‘ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி’ எனும் பெயரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத் தங்களைப் பிரகடனப்படுத்தியுள்ளன.

இது தொடர்பில் சம்பந்தன் எம்.பியிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எவரும் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திக் கட்சிகள், கூட்டணிகள் – கூட்டமைப்புக்கள் அமைப்பதை நான் எதிர்க்கவில்லை.

ஆனால், தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டால் அது மக்களைத்தான் தாக்கும்; மக்களைப் பலவீனப்படுத்தும். தமிழ் மக்கள் இந்தக் கருமத்தில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி நீண்டகால வரலாற்றைக் கொண்ட கட்சி. தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சி; 1949 ஆம் ஆண்டு தொடக்கம் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் கட்சி; தமிழ் மக்களுக்காக அறவழியில் போராடி பல தியாகங்களைச் செய்த கட்சி.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி கொழும்பில் எனது இல்லத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய தமிழரசுக் கட்சி செயற்படுகின்றது. ஆனால், கூட்டமைப்பின் ஏனைய இரு பங்காளிக் கட்சிகளும் (ரெலோ, புளொட்) அந்தத் தீர்மானத்துக்கு எதிர்மறையாகச் செயற்படுகின்றன. இது தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.

தமிழ் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயற்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.

எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் நான் எதிர்ப்பு அரசியல் செய்ய விரும்பவில்லை. இதுவரை காலமும் நடந்த விடயங்கள், நடக்கின்ற விடயங்கள் ஆகியவற்றைத் தமிழ் மக்கள் கவனமாகச் சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.