‘மொட்டு’ தோற்ற கட்சி அல்ல என்பதை இம்முறையும் நிரூபிப்போம்! – மார்தட்டுகின்றார் மஹிந்த.

“எந்தத் தடைகளும் இன்றி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தால் அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடையும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நேற்று நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உள்ளூராட்சி சபைத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என எந்தத் தேர்தல் நடந்தாலும் அதனை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளது.

எந்தத் தேர்தல் நடந்தாலும் எமது கட்சியே வெற்றியடையும். அந்த நம்பிக்கையுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நீங்கள் முன்னெடுக்க வேண்டும்.

தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் தோற்ற கட்சி அல்ல. அதை எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குச் செவிசாய்க்காமல் மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும். மக்களுக்கு உண்மை நிலைமையை நாம் தெளிவுபடுத்த வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.