பிரேசில் அரசியல் : தலைக்கு மேலே தொங்கும் கத்தி

கடந்த வாரம் எழுதிய பிரேசில் குறித்த கட்டுரையில் எதிர்வு கூறப்பட்டதைப் போலவே பிரேசில் நாட்டில் மிகப் பெரிய வன்முறை நடந்தேறி உள்ளது.

முன்னாள் அரசுத் தலைவர் பொல்சனாரோவின் ஆதரவாளர்கள் ஆயிரக் கணக்கானோர் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள அரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றைத் தகர்த்துக் கொண்டு உள் நுழைந்துள்ளார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நியூ யோர்க் நகரில் நடைபெற்ற சம்பவங்களை நினைவுகூரும் வகையில் இந்த வன்முறைச் செயற்பாடுகள் நடந்தேறி உள்ளன.

அன்புடையீர்!
உங்கள் தொலைபேசி எண் வெளியே தெரியாதபடி
சிலோன் மிரர் / சினிமிரர் செய்திகளை
வட்சப் மூலம் பெற , கீழே உள்ள இணைப்பை அழுத்துங்கள் ….
நன்றி!

HTTPS://CHAT.WHATSAPP.COM/LSDLZMMTOM57IEEXFHYPCN

 

புதிய அரசுத் தலைவர் லூலா டா சில்வா பதவியேற்ற ஒரு வாரத்தில், 8ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இந்தச் சம்பவங்கள் நடந்தேறி உள்ளன. லூலாவின் வெற்றி போலியானது என வர்ணித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அவரைப் பதவியில் இருந்து அகற்றி விட்டு பொல்சனாரோவைப் பதவியில் அமர்த்த வேண்டும், ஆயுதப் படைகள் தலையிட்டு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இவ்வாறான ஒரு கிளர்ச்சி நடைபெற வாய்ப்பு உள்ளதாக முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டு இருந்த போதிலும், அதனை முன்கூட்டியே தடுத்து விடுவதில் பாதுகாப்புப் படையினர் தோல்வி கண்டுள்ளனர். இதனை வேறு விதமாகச் சொல்வதானால் அவர்களும் நடைபெற்ற சம்பவங்களுக்கு உடந்தையாகச் செயற்பட்டு உள்ளனர் எனலாம். நூற்றுக் கணக்கான பேருந்துகளில் ஆயிரக் கணக்கான மக்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தலைநகரை நோக்கிப் பயணிப்பதான செய்திகள் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வெளியாகி இருந்தன.

அது மாத்திரமன்றி, இத்தகைய ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஆதரவாளர்களைக் கோரும் அழைப்புகள் சமூக ஊடகங்களிலும் நிறைந்து காணப்பட்டன. இருந்தும், அந்த வன்முறையைத் தடுத்து விடுவதற்கான முன்னேற்பாடுகள் பாதுகாப்புத் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை.

மாறாக, காவல் துறையினரின் கண் முன்னாலேயே அரச கட்டிடங்களுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்தனர். நேரில் கண்ட சாட்சியங்களின் படி, காவல் துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுக்காதது மட்டுமன்றி அவர்களோடு சிநேகபூர்வமாக நடந்து கொண்டுள்ளனர். ஒரு சிலர் அவர்களோடு இணைந்து நிழல் படங்களையும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்களாக ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச கட்டிடங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர். விடுமுறை நாளாக இருந்ததால் அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்கள் எவரும் வருகை தந்திருக்கவில்லை. கட்டிடங்களில் இருந்த பொருட்களை உடைத்துச் சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கிருந்து பெருமளவிலான ஆயுதங்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஆயிரத்து ஐநூறு வரையானோர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தலைநகர் பிரேசிலியாவின் பாதுகாப்பு தற்போது மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பட்டுள்ளது.

பல நாட்களுக்கு முன்னதாக அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஆயிரக் கணக்கான மக்கள் ஒன்றுகூடி இத்தகைய வன்முறைச் சம்பவத்தில் ஈடுபடுவது என்பது அரச நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இன்றி நடைபெற்றிருக்க முடியாது என்ற வாதத்தின் அடிப்படையில் தலைநகர் பிரேசிலியாவின் மாநகர பிதா பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்.

நடைபெற்ற சம்பவத்துக்கு முன்னாள் அரசுத் தலைவர் பொல்சனாரோ மீது குற்றம் சுமத்தப்பட்டாலும், தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள அவர் அதனை மறுத்திருக்கின்றார். அவர் நேரடியாகச் சம்பந்தப்படாவிட்டாலும், அவரது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநில ஆளுநர்கள் ஆகியோருக்கு நிச்சயமாக இதில் தொடர்பு இருக்கும் என நம்பலாம். ஆயிரக் கணக்கான நபர்களை தலைநகருக்கு வரவழைப்பதும், அவர்களுக்கு இலவச பேருந்து வசதி, உணவு, தங்குமிட வசதி என்பவற்றை ஏற்பாடு செய்து கொடுப்பதும் சாதாரண மக்களால் முடியாத விடயம். பணம் படைத்த, அரசியல் செல்வாக்கு மிக்க, ஆயுதப் படையினரின் ஆதரவு பெற்றவர்களாலேயே இத்தகைய ஏற்பாடுகளைச் செய்ய முடியும்.

நடைபெற்ற சம்பவத்துக்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ள அரசுத் தலைவர் லூலா டா சில்வா, மறைமுகமாக பொல்சனாரோவைக் குற்றம் சாட்டியுள்ளார். அது மாத்திரமன்றி, சம்பவத்தில் தொடர்பு பட்டவர்கள் யாராயினும் அவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டுத் தண்டனை விதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார். அத்தோடு, பாதுகாப்புத் துறைக் கட்டமைப்பிலும் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். பாதுகாப்பு உயரதிகாரிகள் சிலர் இடமாற்றம் பெற்றுள்ள அதேவேளை ஒருசிலர் பதவி நீக்கமும் செய்யப்பட்டு உள்ளனர்.

உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள யனவரி 8 சம்பவங்கள் உலக நாடுகள் பலரதும் கண்டனங்களுக்கு ஆளாகி உள்ளது. பிராந்திய நாடுகள் மாத்திரமன்றி, பிராந்தியத்துக்கு வெளியே உள்ள நாடுகளும் கூடத் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. அது மாத்திரமன்றி, லூலா நிர்வாகத்துக்குத் தங்கள் ஆதரவையும் தெரிவித்துள்ளன.

நடைபெற்ற ஜனநாயக விரோதச் சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்க நிர்வாகமும் தனது கண்டனத்தைத் தெரிவித்து உள்ளது. அது மட்டுமன்றி, தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள முன்னாள் அரசுத் தலைவர் பொல்சனாரோவை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இருந்து எழுந்துள்ளது.

நடைபெற்ற சம்பவங்கள் பிரேசில் வரலாற்றில் ஒரு கறைபடிந்த அத்தியாயமாகப் பார்க்கப்படுகின்றது. 1960களில் நிலவிய இருண்ட இராணுவ ஆட்சி யுகத்துக்கு மீண்டும் பிரேசில் சென்று விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டு உள்ளது. உலக நாடுகளில் உள்ள ஆயுதப் படைகளில் மிக மோசமான ஊழல் நிறைந்த இராணுவங்களுள் ஒன்றாக பிரேசில் இராணுவம் கருதப்படுகின்றது.
ஜனநாயக அடிப்படையிலான ஆட்சி அந்த நாட்டில் இருந்தாலும், தனது பிடியை இழப்பதற்குத்(?) தயாரில்லாத நிலையிலேயே அந்த நாட்டு இராணுவம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே, தனது நலனுக்கும், தனது எசமானர்களின் நலனுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வேளையில் ஏதோவொரு விதத்தில் தலையிட்டு தனது நலனையும், தனது எசமானர்களின் நலனையும் பேணுவதற்கு, பாதுகாப்பதற்கு அந்த நாட்டு இராணுவம் பின்னநிற்கப் போவதில்லை என்பதே கசப்பான யதார்த்தம்.

மறுபுறம், தீமையிலும் நன்மை என்பதைப் போன்று லூலாவுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஆதரவு பெருகி உள்ளது. ஜனநாயக விழுமியங்களைச் சிதைக்கும் நடவடிக்கைக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள பிரேசில் மக்கள், லூலாவின் நடவடிக்கைகளுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்து உள்ளனர். மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அவருக்கு, உள்நாட்டில் மக்கள் ஆதரவு அதிகரிப்பது சாதகமான அம்சமாக உள்ளது. அதேவேளை, நடைபெற்ற சம்பவங்களால் ஆட்டம் கண்டுள்ள நிர்வாக இயந்திரத்தையும் தனது இறுக்கமான கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வாய்ப்பும் கிட்டியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கண்டனங்களும், லூலாவுக்குக் கிட்டியுள்ள ஆதரவும் அவரது ஆட்சிக் காலத்தில் பெரிதும் உதவியாக விளங்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேவேளை, அவரது ஆட்சியை எதிர்க்க நினைப்போருக்கு அச்சம் தரும் சேதியாகவும் அவை உள்ளன.

என்னதான் இருந்தாலும், பிரேசில் நாட்டு இராணுவத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. தற்போது அது தனது வாலைச் சுருட்டிக் கொண்டாலும், நிச்சயம் ஒருநாள் சீறிப் பாயவே செய்யும். அதற்கிடையில் படைத் துறையைச் சீரமைப்புச் செய்யும் பணியில் லூலா வெற்றிபெற வேண்டும். அதுவரை அவரின் தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை அவர் மறந்துவிடக் கூடாது.

Leave A Reply

Your email address will not be published.