திருமணமான பெண்ணை மனித எலும்புகளின் சாம்பலை வற்புறுத்தி சாப்பிட வைத்த கணவர் வீட்டார்…!

மாந்திரீக, மூடநம்பிக்கை சார்ந்த அதிர்ச்சிக்குரிய குற்றச் சம்பவங்கள் சமீப காலமாகவே பல மாநிலங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் இப்படி எல்லாம் நிகழுமா என்று அதிர்ச்சியளிக்கும் விதமாக அத்தகைய சம்பவம் புனேவில் நிகழ்ந்துள்ளது. புனேவில் வசிக்கும் 29 வயது பெண்ணுக்கு 2019ஆம் ஆண்டு திருமணம் ஆகியுள்ளது. கம்ப்யூட்டர் இன்ஜினியரான அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆரம்பத்தில் இருந்தே கொடுமைகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

திருமணமான அடுத்த வருடமே கொரோனா பெருந்தொற்று வந்ததால் அவரது குடும்பத்திற்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வரதட்சணை பணம் தர வேண்டும் என பெண்ணை கொடுமைப்படுத்தி அவரது தந்தையிடம் நகை, பணம் பறித்துள்ளனர். மேலும், பெண்ணின் கணவர் குடும்பத்தினருக்கு மாந்திரீகத்தில் நம்பிக்கை உண்டு.

திருமணம் நடந்து 4 ஆண்டுகளாகியும் பெண் கருத்தரிக்க வில்லை என்ற காரணத்தால் அது தொடர்பாக வீட்டில் மாந்திரீக காரியங்களை செய்யத் தொடங்கியுள்ளனர். மந்திரவாதியை கூட்டி வந்து வீட்டில் மனித எலும்புகளை வைத்து மாந்திரீக பூஜைகளை செய்துள்ளனர். பின்னர், அந்த எலும்புகளை உடைத்து சம்பல் போல தூளாக்கி அந்த பெண்ணை சாப்பிட சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர்.

பெண் அதற்கு மறுத்தபோது தலையில் துப்பாக்கி வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டி சாப்பிட வைத்துள்ளனர். இதுபோன்ற கொடுமைக்கு பல முறை ஆளான அப்பெண் கடந்தாண்டு மே மாதம் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்த பெண் மகளிர் ஆணையம் மற்றும் புனே காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். அதன் பேரில் பெண்ணின் கணவர், அவரது உறவினர்கள், மந்திரவாதி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதி அளித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.