மீண்டும் யாழ். மேயராக ஆர்னோல்ட் பதவியேற்பு.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான இம்மானுவேல் ஆர்னோல்ட், மீண்டும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராக இன்று பதவியேற்றார்.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் அதன் முதலாவது சமர்ப்பிப்பின் போது தோற்கடிக்கப்பட்டது.

இதையடுத்து முன்னாள் மேயர் வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜிநாமா செய்ததால் வெற்றிடமாக இருந்த மேயர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது 24 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தில் கூடியிருந்தனர். கூட்டத்துக்குத் தேவையான நிறைவெண் இருப்பதால் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் அறிவித்ததோடு, மேயருக்கான முன்மொழிவுகளைக் கோரினார்.

தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் மேயர் இம்மானுவல் ஆர்னோல்ட்டின் பெயர் முன்மொழியப்பட்டது. இதையடுத்து முன்மொழிவை ஆட்சேபிப்பதாகத் தெரிவித்து ஈ.பி.டி.பியைச் சேர்ந்த எம்.ரெமீடியஸ் சபையையிலிருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேறினர்.

இதனால் தெரிவைக் கொண்டு நடத்துவதற்குத் தேவையான கோரம் இல்லாத காரணத்தால் கூட்டம் ஒத்திவைக்கப்படுகின்றது எனவும், தெரிவுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு நியாயமற்றது எனக் கூட்டத்தில் கலந்து கொண்ட 20 உறுப்பினர்கள் தமது எழுத்து மூல ஆட்சேபனையை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் முன்னாள் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்களில் ஒருவரும் கூடி ஆராய்ந்தனர். அதன் பின்னர் யாழ். மாநகர சபையின் மேயராக முன்னாள் மேயர் இ. ஆர்னோல்ட்டைப் பிரகடனப்படுத்தப்படுத்த ஆளுநர் உத்தரவிட்டார்.

அதற்கிணங்க 2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66(எ) பிரிவின் கீழ், கடந்த வியாழக்கிழமையன்று நடத்தப்பட்ட தெரிவின் மூலம், முன்மொழியப்பட்டதன்படி இ. ஆர்னோல்ட் யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராகப் பிரகடனப்படுத்தப்படுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று நள்ளிரவு வெளியாகியது.

அதையடுத்து இன்று தனது மேயர் பதவியைப் பொறுப்பேற்றார் ஆர்னோல்ட்.

Leave A Reply

Your email address will not be published.