‘மொட்டு’ – ‘யானை’ கூட்டணியை விரட்டியடிக்க அணிதிரளுங்கள்! – அநுரகுமார அறைகூவல்.

“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியை விரட்டியடிக்க வேண்டும். இதற்காக மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்.”

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு – மாளிகாவத்தையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்புக்கு முரணாகச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவோருக்கு எதிராக எமது ஆட்சியின் கீழ் தண்டனை வழங்கப்படும்.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தவர்களைக் கண்டறியுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசை வலியுறுத்தினோம். ஆனால், இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைதாகவில்லை.

முடியுமானால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைபேசியை ஆராயுமாறு பொலிஸாரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

தேர்தலுக்கு நிதி வழங்குவதாக வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நிதியைப் பெற்றுக்கொடுக்க முடியாது எனத் திறைசேரியால் தெரிவிக்க முடியாது.

தேர்தலுக்கு நிதி வழங்காமல் இருப்பது குற்றமாகும். அதற்கு 3 வருட சிறைத் தண்டனை வழங்கப்படும்.

தெரிவத்தாட்சி அதிகாரிகளைக் கட்டுப்பணம் ஏற்க வேண்டாம் என்று தெரிவித்த உள்ளூராட்சி சபைகள் அமைச்ஸின் செயலாளருக்கு எதிராகவும், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் போது உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.