தலித் கஸ்டமர்ஸ் vs கார்ப்பரேட் பிக் பாஸ்கள்

இந்திய சாதிய சமூகத்தின் தொழில் துறை சில வருடங்களுக்கு முன்னால் வரை உயர்ந்த சாதிப் பண்டங்களை விற்று பணம் சம்பாதித்தது. அதாவது அந்தத் தொழில்துறையின் ஒரு அங்கமான சினிமாத்துறை, நாங்கள் தேவர் மகன் எடுப்போம், சின்னக் கவுண்டர், பெரிய கவுண்டர், நடுமத்திக் கவுண்டர்லாம் எடுப்போம், அதை நீங்க பாத்துத் தான் ஆகணும்னு திமிரா இருந்தது.
தலித்துகளும் தேவர் மகனையும், பெரிய கவுண்டர் பொண்ணையும் பார்த்து கை தட்டிக்கொண்டிருந்தார்கள். சற்றேறக்குறைய ஒரு 10 வருடங்களுக்கு முன்பாக இந்திய சாதிய சமூகத்தில், தலித்துகள் தங்களுக்கான இடத்தை எடுத்துக்கொள்ளத் தொடங்கினார்கள். தங்களை வெளிப்படையாக அடையாளம் காட்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். நானெல்லாம் 2015க்கு பின் என்னை அடையாளம் காட்டிக்கொண்டவன் தான்.

இப்படியாக இந்தியா முழுவதும் ஒரு (செட் ஆப்) தலித்துகள் ஒரு பாய்ச்சலை நிகழ்த்துகிறார்கள். எதை இழந்தாலும் என்ன வந்தாலும் பரவாயில்லை என்று ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் போன்ற சமூக ஊடகங்களில் வெளுத்துக்கட்டுகிறார்கள்.
எதுவாக இருந்தாலும் தலித் சார்பான விஷயங்கள் பெரிய டாக், ஹாட் டாபிக் ஆகிறது.

தலித்துகள், தங்களுக்குத் தாங்களே பேசுவது ஒரு பக்கம்.
தலித்துகளுக்காக முற்போக்காளர்கள், கம்யூனிஸ்ட்கள் போன்றவர்கள் பேசுவது ஒரு பக்கம்.
காரியத்துக்காக, சுயநலத்திற்காக தீடீர் தலித் ஆதரவாளர்கள், போலி முற்போக்கர்கள் ஒரு பக்கம்…
இதைவிட முக்கியமாக…. இவர்கள் பேசுகிறார்கள் என்பதற்காகவே இவர்களுக்கு இதற்கு எதிராக பேசும் சாதி வெறி/ மதவெறி கூட்டம்… இன்னொரு பக்கம்…

ஆக களம் செம ஜோராக களேபரமாக இருக்கிறது. கல்லா கட்ட ஓசி விளம்பரம் நிறையவே கிடைத்து விடுகிறது.
கிட்டத்தட்ட விஜய் அஜித் ரசிகர்கள் சண்டைக்கு நிகராக அல்லது விடவும் ரொம்ப ரொம்ப பெருசாக.
இந்திய தொழில்துறை உஷாராகிறது. சினிமாத்துறையில் தலித் கதாபாத்திரங்கள் / தலித் ஆதரவு படங்கள் தொடர்ந்து வரத் தொடங்குகிறது.

ஒரு போதும் அவர்கள் தலித்துகளுக்கு சப்போர்ட் பண்ணவோ, காலம் காலமாக அவர்கள் இருக்கும் நிலையை மாற்றவோ படம் எடுக்கவில்லை.

மார்க்கெட்டில் அது செல்லுபடி ஆகிறது. அதற்கென தனி டிமாண்ட் உருவாகி இருக்கிறது. அந்த டிமாண்ட்டுக்கு சப்ளை செய்து காசு பார்க்க முற்படுகிறார்கள். அவ்வளவு தான்.

அந்த முதலாளிகள் செய்வதில் அவர்களுக்குத் தெரியாமல்/ அவர்கள் விரும்பாமலே நடக்கும் நல்ல காரியம்… இன்க்ளுசிவ் பாலிடிக்ஸ் / பொதுமைப்படுத்துதல் , அதாவது தேவர் மகனுக்கு கிடைத்த இடம் பறையர் மகனுக்கும் கிடைக்கும்.

பறையர் மகனை ஒட்டு மொத்தமாக இந்த சாதிய தொழில் சமூகத்தால் தவிர்த்து விட முடியாது. அதனால் அதையும் சேர்த்துக்கொண்டு காசு பார்த்தலை செய்கிறார்கள்.

முதலாளிகளே பறையர் மகனை விற்பனைக்கு வைத்தால் எந்த சாதி வெறியர்களும் மத வெறியர்களும் அதை எதிர்த்து நிற்க முடியாது.
ஏனெனில் உலகின் எல்லா இஸங்களுக்கும் ஒரே முதலாளி #கேப்பிட்டலிஸம் தான். பெரிய முதலாளியை எதிர்த்து சின்ன முதலாளிகள் ஒரு முடியும் pUடுங்க முடியாது என்பதே வரலாறு கூறும் உண்மை.

அதாவது முதலாளித்துவம், தலித் பண்டங்களுக்கான டிமாண்டையும் அதற்கான கஸ்டமர்களையும் இழக்கத் தயாரில்லை. அம்புட்டு தான்.

அந்த அடிப்படையில் தான் பிக் பாஸ் சீசன்களில் ஒரு தலித் / அல்லது தலித் கலர் கொண்ட ஒருவரை தவறாமல் உள்ளே இறக்குகிறார்கள். விக்ரமன் போன்றவர்களை வைத்து அவர்களுக்கு டிஆர்பி மற்றும் பல கோடி பிஸினெஸ் லாபம்.

அதுவே விக்ரமன் போன்றவர்களுக்கு அவர்களுக்கு பொதுவெளியில் கிடைக்கும் / தரப்படும் இடம் பெரிய லாபம்.

அந்த பொதுவெளி அங்கீகாரத்திற்காகத் தானே பல வருடமாக மல்லுக்கட்டுகிறோம். அதை முதலாளித்துவம் தருமெனில்… முதலாளித்துவத்திற்கு பெரிதாக ஒரு சல்யூட் வைப்போம்.

இந்த களேபரத்தில் குறுக்கா மறுக்கா புகுந்து த்ரோபதிகளும் சூத்திரதாண்டவங்களும் கூட கல்லா கட்டிக்கொள்கிறார்கள். குருவி உட்கார…ஹா ஹா… அதற்கும் தலித்துகளே பெரிய அளவில் ஓசி விளம்பரம் செய்து விடுகிறார்கள்.

ஆக இன்னும் சில வருடங்களுக்கு அல்லது இந்தியாவில் சாதிவெறியும் மதவெறியும் இப்படியே நீடிக்கும் வரை இந்த தலித் / தலித் ஆதரவு பண்டங்களுக்கான சந்தை திறந்தே இருக்கும்.

இப்படி ஒரு சந்தை உருவான தொடக்க காலத்தில் இந்த சந்தையை முதலில் சில புத்திசாலி தலித்துகள்/தலித் ஆதரவாளர்கள் இந்த சந்தையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள். பட்… இப்போது மற்றவர்களும் உஷாராகி விட்டார்கள்.
எந்த உளவுக்கு உஷாராகி விட்டார்கள் என்றால்….

தீவிர சாதி வெறியும் மதவெறியும் கொண்டவர்களே…. அட்டகாசமான தலித் அரசியல் / தலித் வாழ்வியல் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
இந்த சந்தையை இந்த சூழலை தலித்துகள் புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சமூகத்தின் அனைத்து தளங்களிலும் தங்களுக்கான இடத்தை அவர்கள் எடுத்துக்கொள்ள இதைக் கருவியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதை மற்றவர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.

கம்யூனிசமும் திராவிடமும் ஒரு எல்லை மட்டுமே வரும், வர முடியும்.

தலித்துகளுக்கான இடத்தை தலித்துகள் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விசயத்தில் இந்தியாவில் கோலோச்சும் பிற சாதிகளை கண்ணை மூடிக்கொண்டு காப்பியடியுங்கள். அப்போது தான் உங்கள் இடத்தை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும்.

– முருகன் மந்திரம்

Leave A Reply

Your email address will not be published.