சொல்வதை செயலில் ரணில் காட்ட வேண்டும் என அமெரிக்க ராஜாங்க செயலர் விக்டோரியாவிடம் தமிழ் பேசும் கட்சிகள்..

சொல்வதை செயலில் காட்டும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிக்கு, உங்கள் நல்லுறவை பயன்படுத்தி கூறுங்கள் என இலங்கை வந்த அமெரிக்க ராஜாங்க திணைக்கள அரசியல் துணை செயலாளர் விக்டோரியா நுலாந்துக்கு தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் என்ற முறையில் கூறினோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதுவே தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஏகோபித்த நிலைப்பாடாக இருந்தது என்ற எம்பி மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இந்த ஜனாதிபதிக்கு எதிரணி தலைவர் சஜித், முன்னாள் ஜனாதிபதி மகிந்த, ஜேவிபி தலைவர் அனுர ஆகியோரது 13ம் திருத்தம் தொடர்பான சாதகமான நிலைப்பாடு இருக்கிறது. அதைக்கூட அமுல் செய்ய அவர் தயங்குகிறார்.

வடகிழக்கு தமிழ் கட்சிகள், இந்திய வம்சாவளி மலையக கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் ஆகிய மூன்று தரப்புகள் இப்போது இலங்கை பிரச்சினை தொடர்பில் இருக்கின்றன. இது கடந்த கால சமாதான பேச்சுவார்த்தை சூழலின் பின் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகும். ஆகவே இப்போது இந்த மூன்று தரப்புடனும் தனித்தனியாக பேசும்படியும், அதன்பின் சர்வகட்சி மாநாட்டை நடத்தும்படியும், ஜனாதிபதிக்கு ஆலோசனையும் கூறுங்கள், என நான் அவரிடம் கூறினேன்.

இதை அனைத்து தமிழ் பேசும் கட்சிகளும் ஆமோதிக்கிறீர்களா என செயலாளர் விக்டோரியா நுலாந் எம்மிடம் வினவினார். இந்நிலையில் அனைத்து தமிழ் பேசும் கட்சி பிரதிநிதிகளும் இந்நிலைப்பாட்டை ஆதரித்து, அனைவரிடமும் பேச சொல்லுங்கள் என்று கூட்டாக அமெரிக்க ராஜாங்க திணைக்கள அரசியல் துணைச் செயலாளர்
விக்டோரியாவிடம் தெரிவித்தன.

தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் இந்த நிலைபாடுகளை ஜனாதிபதிக்கு, நாடு திரும்பும் முன் தெரிவிப்பதாக அரசியல் துணை செயலாளர் விக்டோரியா நுலாந்த் எம்மிடம் உறுதியளித்தார்.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளை படிபடியாக ஆராய்ந்து தீர்வு காணும் செயன்முறை அமுலாக வேண்டும். அதற்கு அமெரிக்கா துணை இருக்கும் என ராஜாங்க திணைக்கள அரசியல் துணை செயலாளர் எம்மிடம் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.