தேர்தல் ஒன்றை நடத்துவதற்குப் பொருத்தமான நேரம் இதுவல்ல! – ஆணைக்குழுவின் முடிவைக் கடாசினார் ஜனாதிபதி.

“சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இந்த மாதம் வழங்கப்படும். அதற்கமைய, நாட்டு மக்களின் பிரச்சினைக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நேரத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குப் பொருத்தமான சூழல் ஒன்று இல்லை.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நேற்று (07) மாலை நடைபெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்தத் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றுக் காலை தன்னிச்சையாக முடிவெடுத்துள்ள நிலையிலேயே நேற்று மாலை ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒன்றை நடத்துவதால் பெரிய மாற்றம் ஒன்று வந்துவிடப்போவதில்லை.நாங்கள் ரூபாவை மேலும் வலுவடையச் செய்ய வேண்டியதே தற்போது முக்கிய விடயமாகும்.

இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்குக் குறைந்தது 4 வருடங்களாகும் எனப் பலர் கூறினார்கள். ஆனால், 8 மாதங்களில் நெருக்கடியைத் தீர்க்க முடிந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இந்த மாதம் வழங்கப்படும். அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்; நிவாரணம் வழங்கப்படும்.

ஏனைய கட்சியினர் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றுவதற்குத் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். பந்து எங்கள் கைகளுக்குக் கிடைத்துள்ளது. அடித்து ஆடத் தயாராக இருங்கள்” – என்று ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.